Lok Sabha Elections 2024: காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவின் அறிக்கை குறித்து, அக்கட்சியுடன் கூட்டணியில் உள்ள திமுகவிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.


பிரச்னையை கொளுத்தி போட்ட சாம் பிட்ரோடா:


நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மூன்றுகட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளது. நான்காம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் தென்னிந்திய மக்களை காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா சொன்ன கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தேசிஅய் அளவில் விவாத பொருளாகவும் மாறியுள்ளது. பிரதமர் மோடி அதனை குறிப்பிட்டு, காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுகவிற்கும், அதன் தலைவர் ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். 


ஸ்டாலினுக்கு சவால் விட்ட பிரதமர்:


மத்திய பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, “காங்கிரஸின் மூத்த தலைவரும், இளவரசர் ராகுல் காந்தியின் மிகப்பெரிய ஆலோசகரும் கூறியது மிகவும் வெட்கக்கேடானது. வடகிழக்கு மக்கள் சீனர்கள் போல் இருப்பதாக காங்கிரஸ் கருதுகிறது. இதுபோன்ற விஷயங்களை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளுமா? தென்னிந்திய மக்கள் ஆப்பிரிக்க மக்களைப் போல் இருப்பதாக காங்கிரஸ் நினைக்கிறது. இதுபோன்ற கருத்தை ஏற்க முடியுமா என்று கர்நாடகா மற்றும் தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர்களிடம் கேட்க விரும்புகிறேன்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக கலாச்சாரம் குறித்து அடிக்கடி பேசுகிறார். ஆனால் தமிழர் சுயமரியாதைக்காக காங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொள்ள அவருக்கு தைரியம் இல்லை. தமிழ்நாட்டின் கலாச்சாரம் பற்றி தொடர்ந்து பேசும் தமிழக முதலமைச்சரிடம் கேட்க விரும்புகிறேன். இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை கருத்தில் கொண்டு, தமிழர்களின் சுயமரியாதைக்காக காங்கிரஸ் உடனான கூட்டணியை திமுக முறித்துக் கொள்ளுமா? இதற்கு அவர்களுக்கு தைரியம் இருக்கிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.


இதையும் படியுங்கள்: Sam Pitroda: தென்னிந்தியர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா ராஜினாமா


சாம் பிட்ரோடா ராஜினாமா..!


முன்னதாக, வாரிசு வரி தொடர்பாக சாம் பிட்ரோடா பேசியதும் பெரும் சர்ச்சையானது. இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின் போது, இதனை முன்வைத்தே பாஜக பரப்புரையை தீவிரப்படுத்தியது. இந்நிலையில்,  சாம் பிட்ரோடாவின் கருத்துகள் அடுத்தடுத்து சர்ச்சை ஆன நிலையில், காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா கூற வந்த முறையானது ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியானது, அவர் கூறிய கருத்திலிருந்து விலகியே இருக்கிறது ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.