தஞ்சாவூர்: உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவமனையில் இருந்து நேரடியாக மனுதாக்கல் செய்ய தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.


கடந்த 20ம் தேதியிலிருந்து அனைத்து கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் அதிகாரி மூலம் தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் நான்கு நாட்களாக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. நேற்று முன்தினம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுயேட்சை மற்றும் தேமுதிக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.


காய்ச்சலுடன் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்


வேட்பு மனு தாக்கல் செய்ய (இன்று) 27ம் தேதி கடைசி நாள். இதனால் நேற்று மதியம் கடுமையான வைரஸ் காய்ச்சலுடன் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹீமாயூன் கபீர் கையில் வென் பிளானுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். 


பின்பு தஞ்சை தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹீமாயூன் கபீர் தஞ்சை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும்,   மாவட்ட ஆட்சியருமான  தீபக் ஜேக்கப் பிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். 
வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஹீமாயூன் கபீர் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது வெயிலின் தாக்கத்தினாலும் உடல் நிலை சரி இல்லை என்ற காரணத்தினாலும் மயக்கம் ஏற்பட்டது.


இதன் காரணமாக சிறிது நேரம் நாற்காலியில் அமர்ந்து பழச்சாறு அருந்தி பின்பு இளைப்பாறி விட்டு வேட்பு மனு தாக்கல்  செய்தார். மீண்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.





தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர்


தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்  தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட அதன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பனசை அரங்கன் (62) போட்டியிட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டர்மான தீபக் ஜேக்கப்பிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.


தஞ்சாவூர் கீழவீதியை சேர்ந்த நாமதேவன் என்பவரின் மகன் பணசை அரங்கன் 62. திருமணம் ஆகாதவர். இவர் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளராக உள்ளார். இவர் நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட நேற்று தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் இடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் கடந்த 2014ம் ஆண்டு தஞ்சாவூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.


வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து பனசை அரங்கன் தெரிவித்ததாவது:


கடந்த 70 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தியும் கூட தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ரயில் பாதை அமைக்காமல் உள்ளனர் இந்த நிலையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அந்த ரயில் பாதையை அமைத்து தருவேன்.  தமிழகம் முழுவதும் 50 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்தும் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.


தஞ்சாவூர் வழியாக தூத்துக்குடி-சென்னை சென்று கொண்டிருந்த ஜனதா விரைவு வண்டி நாகூர்-தஞ்சாவூர்- கொல்லம் வரை சென்ற தொடர்வண்டி தஞ்சையில் இருந்து சென்னை எழும்பூர் வரை செயல்பட்டுக் கொண்டிருந்த பயணிகள் வண்டி தஞ்சை-விழுப்புரம் பயணிகள் வண்டிகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு நிறைவேற்றிக் காட்டுவேன். இவர் அவர் கூறினார்.


சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல்


இதே போல் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட அர்ஜுன் (30) என்பவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  தஞ்சாவூர் தாலுக்கா மாத்தூர் தொட்டி பகுதியை சேர்ந்த சுயம்பு என்பவரின் மகன் அர்ஜுன். விவசாயி. இவர் கடந்த 2021ம் ஆண்டு திருவையாறு சட்டமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். தற்போது நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட கலெக்டரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.


அதேபோல் தஞ்சாவூர் விளார் பகுதியை சேர்ந்த கரிகால சோழன் 40 என்பவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.  தஞ்சாவூர் விளார் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் கரிகால சோழன். இவர் கடந்த 2016 மற்றும் 2021 இம் ஆண்டுகளில் நடந்த தஞ்சை சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். தற்போது தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட தனது வேட்பு மனுவை தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான தீபக் ஜேக்கப்பிடம் தாக்கல் செய்தார்.


இவருக்கு சகிலா தேவி என்ற மனைவியும் ஆதித்ய சோழன் மகாலட்சுமி என்ற மகன் மற்றும் மகள் உள்ளனர் பி.லிட் வரை இவர் படித்துள்ளார்.


சமூக நீதி மக்கள் கட்சியை சேர்ந்தவர்


சுயேட்சை வேட்பாளராக போட்டியிட ரங்கசாமி 52 தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர். சமூக நீதி மக்கள் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுயேட்சை வேட்பாளராக சதீஷ் (37) நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர். அவரது தந்தை ராஜு, தாய் கமலா. சுயதொழில் செய்து வருகிறார். தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்தார்.