விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் – 2024 முன்னிட்டு, தேர்தல் நடத்ததை விதிமுறைகள் பின்பற்றுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் இன்று (16.03.2024) நடைபெற்றது.


மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவிக்கையில்,


இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாடுவழுவதும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்திய தேர்தல் ஆணையாத்தால் இந்திய பொதுத்தேர்தல்கள் அறிக்கை செய்யப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதனால் பொதுத்தேர்தல் சுமூகமாக நடத்திட உதவுகிறது. மேலும், அனைத்து கட்சிகளையும் சமமாக பாவிக்கவும் நடைமுறையை உறுதி செய்கிறது.


அதனடிப்படையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் அரசியல் சார்ந்த படங்கள், காலண்டர்கள், நலத்திட்ட ஸ்டிக்கர்கள், பிரதம மந்திரி, முதலமைச்சர், அமைச்சர்களின் படங்கள் வைத்திருக்கக்கூடாது உடனடியாக அவற்றினை அகற்றிட வேண்டும். அரசியல் கட்சியினை சார்ந்த இறந்துபோன தலைவர்களின் சிலையினை மறைத்திட வேண்டியதில்லை.


ஆனால் அவர்களின் சிலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் சின்னங்கள், கல்வெட்டுகள் கட்டாயம் அகற்றிட வேண்டும். மேலும், வரலாற்று சிறப்பு மிக்க இறந்துபோன தேசிய தலைவர்கள், கவிஞர்கள், இந்திய ஜனாதிபதி மற்றும் ஆளுநர் புகைப்படம் அலுவலகங்களில் வைத்துக்கொள்ள தடையேதுமில்லை. தேர்தல் தொடர்பான அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களில் தேசிய கொடிகள் பயன்படுத்தாமல் இருப்பதை கண்காணித்திட வேண்டும். துறை சார்ந்த நலத்திட்ட விழாக்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் கால்நடைகள் மருத்துவ சிகிச்சைகளின் போது விளம்பர பதாகைகள் வைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.


அரசுக்கு சொந்தமான இடங்களில் சுவர் எழுத்துக்கள், சுவரொட்டிகள், காகிதங்கள் அல்லது ஏனைய யாதொரு வகையிலான சேத நடவடிக்கைகள், விளம்பர பலகைகள், பதாகைகள், கொடிகள் போன்றவை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும். இரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், இரயில்வே பாலங்கள், சாலைகள், அரசு பேருந்துகள், தொலைபேசி கம்பங்கள், நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் கட்டடங்கள் போன்ற பொது இடங்களில் சுவர் எழுத்து, சுவரொட்டிகள், விளம்பர பலகைகள், பதாகைகள், கொடிகள் போன்ற வகையிலான அனுமதியற்ற அரசியல் விளம்பரங்கள் ஆகியவை 48 மணி நேரத்திற்குள் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தனியாருக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற அரசியல் விளம்பரங்கள், உள்ளூர் சடடத்திற்குட்படடும், நீதிமன்றத்தின் ஆணைக்குட்பட்டும் ஏதேனும் அரசியல் விளம்பரம் வைக்கப்பட்டிருப்பின் அவற்றினை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அலுவலக வலைதளத்தில் அரசியல் சார்ந்த பொறுப்பாளர்களின் புகைப்படம், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் அல்லது அரசியல் கட்சிகள் பற்றி மத்திய, மாநில அரசுகளின அலுவலக வலைதளத்திலுள்ள அனைத்து குறிப்புகளும் நீக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தெரிவித்தார்.