மீனவர்கள் விவகாரத்தில் பிரதமர் மோடியை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். 


பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மத்திய அரசின் பங்கையும் மாநில அரசின் பங்கையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும், எல்லாவற்றிலும் மாநில அரசின் பங்கு அதிகமானது. ஆனால் பெயர் மற்றும் மத்திய அரசு என்பார்கள் என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். 


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் செய்த ஊழல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பாஜக மிக பெரிய ஊழலில் சிக்கி உள்ளது. அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி உண்மைக்கு புறம்பான செய்திகளை பேசி வருவதை வழக்கமாக கொண்டு வருகிறார்.


2019 இல் தேர்தல் பத்திரமுறையை பாஜக கொண்டு வர முயற்சிக்கும் போது இது லூட்டிங் கொள்ளையடிக்க கூடிய முயற்சி என்று ராகுல் காந்தி கூறினார். இது வெளிப்படை தன்மையை இல்லாமல் ஆக்கி விடும், தேர்தல் நடைமுறையை சீரழித்து விடும், ஊழலை ஊக்குவிக்கும் என்றும் கூறினார். அதை மீறி தேர்தல் பத்திர முறையை கொண்டு வந்து இன்றைக்கு கோடி கோடியாக பணத்தை பணக்காரர்களை மிரட்டி, அடிபணிய வைத்து பாஜக அரசு பணம் வாங்கி உள்ளனர்.


காண்ட்ராக்ட் மூலம் வரும் சலுகைகளை கொடுத்து பணத்தை பெற்று உள்ளனர். நஷ்டதில் இயங்கும் நிறுவனங்களிடம் இருந்து பணத்தை வாங்கி உள்ளனர். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் எப்படி பல கோடி  கொடுத்திருக்கும். வருமான வரியினரிடம் இருந்து அவர்களை பாதுகாக்க நஷ்ட கணக்கை காட்ட வைத்தீர்களா? நஷ்டத்தில் இருக்கும் நிறுவனகளுக்குக் வங்கியில் இருந்து பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்ய வைத்து அதற்கு கையூட்டாக பெற்றீர்களா? என்கிற கேள்விகள் எழும்புகிறது.


CAG அறிக்கையில் மிக தெளிவாக பல லட்சம் கோடி தவறு நடந்துள்ளது என்றனர். அதை மூடி மறைக்க சாதாரண மக்களின் வாழ்க்கைக்கு தேவையில்லாத  பிரச்சனையை பேசி மக்களை பிரதமர் திசை திருப்பி வருகின்றார். நேற்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேசிய பிரதமர் மீனவர்களுக்கு பாதுகாப்பு என்று கூறினார். அவரை பார்த்து நேருக்கு நேராக ஒரு கேள்வியை கேட்கிறேன்.


சீனா வட இந்தியாவில் 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதியை ஆக்கிரமித்துள்ளது உங்கள் ஆட்சியில் என்று பல குற்றச்சாட்டுகள் வந்து இருக்கிறது. அதை வாய்மொழி மௌனியாக பார்த்தீர்களா?


10 ஆண்டு கால ஆட்சியில் உங்கள் அரசியல் சாதுறியதின் மூலமாகவோ  அல்லது மிக பெரிய இராணுவ கட்டமைப்பின் மூலமாகவோ கச்சதீவை மீட்டு எடுக்க முயற்சி செய்தீர்களா? எந்த முயற்சியும் நீங்கள் செய்யவில்லை. 2018 பாஜக ஆட்சியில் முதன் முறையாக இலங்கை நம்முடைய மீனவர்கள் படகை விலைக்கு விற்று தேசிய மயமாகினர். அதையும் வாயை மூடி பார்த்து கொண்டு இருந்தார். மீனவர்களின் படகுகளை கூட நம் நாட்டு மக்களுக்கு வாங்கி கொடுக்க துப்பில்லாத பிரதமர் மீனவர்களை பாதுகாப்போம் என்கிறார். இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக 28 மீனவர்கள் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். முதல்வர் மத்திய அமைச்சர்க்கு கடிதம் எழுதி உள்ளார். நம் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களை மீட்டு எடுக்க முயற்சி செய்தார்களா? பின்னர் எப்படி அவர் மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்.


ரூ.50,000 கோடி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறைக்கு 10 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தந்துள்ளது.  ஒரு ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி  தமிழ்நாடு அரசு ஒதுக்கி வருகிறது.


நிதி பங்கீட்டில் ஓர வஞ்சனை உடன் தான் தமிழ்நாட்டிற்கு கொடுக்கின்றனர். GST வரியில் நாம் கொடுக்கும் அளவில் மிக குறைந்த அளவு தான் வருகிறது.   பாஜக, தேர்தல் பத்திரங்களை ரெய்டு மூலம் அச்சுறுத்தி வாங்குவது ஒரு முறை, பெரிய பெரிய காண்ட்ராக்ட் கொடுத்து வாங்குவது மற்றொரு முறை.


பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மத்திய அரசின் பங்கையும் மாநில அரசின் பங்கையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எல்லாவற்றிலும் மாநில அரசின் பங்கு அதிகமானது. ஆனால் பெயர் மற்றும் மத்திய அரசு என்பார்கள்” என தெரிவித்தார்.