மக்களவை தேர்தலானது கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது.  இதையடுத்து, இந்தியா முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 4ம் தேதி) வெளியானது. இதையடுத்து, இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 


அதன்படி, தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மாதிரி நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு, அது தேர்தல் செயல்முறை முடியும் வரை செயல்பாட்டில் இருந்தது. 


இப்போது, ​​மக்களவை (லோக்சபா), 2024 மற்றும் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உள்ள மாநில சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தல்கள் மற்றும் சில இடைத்தேர்தல்கள் தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மக்களவை தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தன. இதையடுத்து, கடந்த மார்ச் 16ம் தேதி முதல் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள், மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில் விலக்கி கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


நடத்தை விதியால் என்னென்ன முடங்கின..? 


அரசு சார்பில் ஏதேனும் புதிய பணிகள் தொடங்க இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் சம்பந்தப்பட்ட துறைகள் அனுமதி பெற தேவையில்லை. அதே நேரத்தில், தேர்தல் நடத்தை விதிகள் நீக்கப்பட்டவுடன், மாநில அமைச்சரவை கூட்டம் நடத்திக்கொள்ளலாம்.  கடந்த மார்ச் 16ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து,எந்தவொரு மாநில அமைச்சரவை கூடவில்லை. இதனால், முடங்கிப்போயிருந்த ஆட்சேர்ப்பு பணிகள் தொடங்குவதற்கான உத்தரவுகள் அடுத்தடுத்து பிறப்பிக்கப்படலாம். பொதுப்பணித்துறை, நீர்வளத் துறை , வனத்துறை உள்ளிட்ட பிற துறைகளில் வளர்ச்சி பணிகள் முடங்கிய நிலையில், தற்போது இத்துறைகளில் வளர்ச்சி பணிகள் தொடங்கும். 


அதேபோல், இனி, அரசின் திட்டங்களை அறிவிக்கலாம், அடிக்கல் நாட்டலாம், திட்டங்களை துவக்கி வைக்கலாம். விரைவில் குறைதீர்க்கும் கூட்டம் மீண்டும் தொடங்கலாம். 


இதனால் மக்களுக்கு என்ன பயன்? 


தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, ஒருவர் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல், அதிக மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த  2 மாதங்களுக்கு மேலாக அமலில் இருந்த நடத்தை விதிகள் இன்று நள்ளிரவுடன் விலக்கப்பட்டுள்ள நிலையில், இனி பொதுமக்கள் பணம், பொருட்கள் கொண்டு செல்வதில் எந்தவித கட்டுப்பாடும் இருக்காது. 


மேலும், தமிழ்நாட்டில் பழுதடைந்த சாலைகளை சீரமைத்து, உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக, பகுதிவாசிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். கழிவு மேலாண்மை முதல் நீர் வழங்கல் வரையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண குடிமக்களுக்கு குறை தீர்க்கும் கூட்டங்கள் ஒரு முக்கியமான தளமாக உள்ளது. மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் கூட்டங்களை மீண்டும் துவக்கி, தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட புதிய சாலை திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.