கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விருந்து படைத்து வந்த நிலையில், தற்போது அதை தொடர்ந்து டி20 உலகக் கோப்பை 2024 ஒரு படையலையே கொடுத்து வருகிறது.
கடந்த ஜூன் 2ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. இதில், எந்த உலகக் கோப்பையிலும் இல்லாத அளவிற்கு 20 அணிகள் பங்கேற்கு தங்களது திறமைகளை அனைத்து அணிகளும் வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை, 10 போட்டிகள் நடந்துள்ளநிலையில், கனடா, அமெரிக்கா, பப்புவா நியூ கினியா, ஓமன், நமீபியா உள்ளிட்ட கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் அணிகளும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளன.
இப்படி ஒரு புறம், வளர்ந்து வரும் நாடுகள் உலகை கவர்ந்துள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டேல் ஸ்டெய்னுக்கு அமெரிக்க ஊழியர் ஒருவர் பந்துவீச சொல்லி கொடுத்த ஒரு வீடியோ அனைவரும் ஆச்சரியத்தை ஆழ்த்தியுள்ளது.
அப்படி என்ன நடந்தது..?
2024 டி20 உலகக் கோப்பையில் வர்ணனையாளராக தற்போது அமெரிக்காவில் இருக்கும் டேல் ஸ்டெய்ன், ஏதேனும் ஒரு அணியில் வளர்ந்து வரும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சந்தேகம் என்றால் சொல்லி கொடுப்பார். ஆனால், ஸ்டெய்ன் யார் என்றே அடையாளத்தை முழுமையாக தெரியாத அமெரிக்க ஊழியர் ஒருவர், ஜாம்பவான் ஸ்டெய்னுக்கு சில பந்துவீச்சு அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதை எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஸ்டெயினும் தனக்கு எதுவும் தெரியாததுபோல், அனைத்தையும் ஆர்வத்துடன் கற்றுகொண்டு தான் முதல்முறை பந்துவீசுவதுபோல் முயற்சி செய்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
ஏன் பிரபலம் இல்லாத அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை..?
அமெரிக்காவில் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமெரிக்காவில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் 2024 டி20 உலகக் கோப்பையை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
டேல் ஸ்டெய்ன் கிரிக்கெட் வாழ்க்கை:
1983ம் ஆண்டு பிறந்து 2004ம் ஆண்டு தனது 21 வயதில் தென்னாப்பிரிக்கா அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் டேல் ஸ்டெய்ன். இவரது அதிவேகமாக பந்துவீச்சு திறமையால் கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக ஸ்டெய்ன் கன் என்று அழைக்கப்பட்டார். ஸ்டெய்ன் தென்னாப்பிரிக்காவுக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்களை வீழ்த்தியுள்ளது. இதில் 27 நான்கு விக்கெட்களும், 26 ஐந்து விக்கெட்களும், 5 முறை 10 விக்கெட்களும் அடங்கும். டெஸ்ட் போட்டியில் ஸ்டெய்னின் சிறந்த பந்துவீச்சு 7/51 ஆகும்.
டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 250, 350 மற்றும் 400 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். கடந்த 2008 மற்றும் 2014ம் ஆண்டு வரை அதாவது சுமார் 235 வாரங்கள் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதுபோக, 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்களும், 47 டி20 போட்டிகளில் விளையாடி 64 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக 265 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்காக களமிறங்கிய டேல் ஸ்டெய்ன், 3.78 என்ற எகானமியில் 699 விக்கெட்களை எடுத்துள்ளார். மேலும், தென்னாப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ர பெருமையை பெற்றுள்ளார், 823 விக்கெட்களுடன் ஷேன் பொல்லாக் முதலிடத்தில் உள்ளார்.