பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் வாக்கு சேகரிக்கிறார். 


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரை களைக்கட்டியுள்ளது. பிரதமர் மோடி தொடங்கி பாஜகவின் தேசிய தலைவர்கள் எல்லாரும் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 9, 10, 13, 14 ஆகிய தேதிகளில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். 


தமிழ்நாட்டை பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு தேர்தல் வரை வேறோரு தலைமையின் கீழ் இருந்த பாஜக, இம்முறை கூட்டணிக்கு தலைமை வகிக்கிறது. அக்கட்சியில் பாஜக, தமாகா, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அமமுக, ஓபிஎஸ் அணி, ஐஜேகே கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளது. இதில் பாஜக மட்டும் 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது.


இப்படியான நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். இதற்காக கேரளாவில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த அவர் நேற்று இரவு அங்குள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஓய்வெடுத்தார். இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் செல்லும் ஜே.பி.நட்டா அங்கு அத்தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்திகாயினிக்கு ஆதரவாக பரப்புரை செய்யவுள்ளார். 






இதன்பின்னர் மீண்டும் கரூருக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லும் அவர், அங்கு பாஜக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதனையடுத்து விருதுநகருக்கு செல்லும் ஜே.பி.நட்டா அங்கு நடிகை ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். இதன்பின்னர் மீண்டும் திருச்சிக்கு வரும் அவர், அத்தொகுதி அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து வாகன பேரணி மேற்கொண்டு வாக்கு சேகரித்து விட்டு இரவு 7 மணியளவில் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்லவுள்ளார். ஜே.பி.நட்டா வருகையால் தமிழக பாஜக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் அவர் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.