மக்களவை தேர்தலுக்கான தேதி கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து பெரும்பான்மையை நிரூபிக்க துடிக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்ற திமுக கட்சி, மக்களவை தேர்தலிலும் வெற்றியை உறுதிசெய்ய கடுமையாக முயற்சி செய்து வருகிறது. அதன் அடிப்படையில், திராவிட முன்னேற்ற கழகம் காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீட்டையும் ஒப்பந்தம் செய்தது. 


ஆனால் தமிழ்நாட்டில் மற்றொரு பெரிய கட்சியாக உள்ள அதிமுக, இன்று வரை கூட்டணி அமைக்க தத்தளித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை வரை அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது பாமக. 


இந்தநிலையில், அதிமுக இன்று தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக அதிமுக சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையும் இன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 


தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கிறதா அதிமுக..? 


தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக வலம் வரும் அதிமுக தங்களது கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி, புரட்சி பாரதம் கட்சி மற்றும் எஸ்டிபிஎஐ கட்சிகளை இணைத்தது. ஆனால், 2011 தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக உடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையிலும், கூட்டணி குறித்த எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேமுதிக கட்சி 40 தொகுதிகளுக்கான விருப்ப மனுவை விரும்புவோர் மனு அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தது. 


இந்தநிலையில் அதிமுக, தேமுதிக இடையே தொகுதி பங்கீடு இதுவரை சுமூகமாக முடிந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ, அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம்  கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் பிற கட்சிகளின் தலைவர்கள் உடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 


கூட்டணி கட்சிக்கு எத்தனை தொகுதி.?



  •  புதிய தமிழகம் - தென்காசி தொகுதி

  • எஸ்டிபிஐ கட்சி - திண்டுக்கல் தொகுதி

  • புரட்சி பாரதம் கட்சி - விழுப்புரம் தொகுதி

  • அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி - தேனி அல்லது மயிலாடுதுறை தொகுதி

  • தேமுதிகவை பொறுத்தவரை கள்ளக்குறிச்சி, விருதுநகர், கடலூர் உள்ளிட்ட 4 தொகுதிகள் ஒதுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியீடு


 அதிமுக கூட்டணி கட்சிகளுடன் இன்று தொகுதி பங்கீடு ஏற்படவுள்ள நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகலாம். நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவாதன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.