மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியுடன் சேர்த்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை வழங்கியுள்ளது என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று மாலை பாஜக தலைமை வெளியிட வாய்ப்புள்ளது என தெரிவித்தார். 


இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “ தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓ. பன்னீர் செல்வம் அணியைப் பொறுத்தவரையில், அவர் தொடர்பான அறிவிப்பை ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பார் என தெரிவித்தார். 


மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 28 நாள்களே உள்ள நிலையில்,  தமிழ்நாட்டில் திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக, பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று அதாவது மார்ச் மாதம் 21ஆம் தேதி வெளியாகியுள்ளது.


கோவையில் களம் காணும் அண்ணாமலை:


அதில், பல முக்கிய வேட்பாளர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. கோவை மக்களவைத் தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து விலகிய தமிழிசை சௌந்தரராஜன் தென்சென்னையில், திமுக வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அதிமுகவின் ஜெயவர்தன் ஆகியோருக்கு எதிராக களமிறங்குகின்றார். 


அதேபோல, திமுக மூத்த தலைவர் ஆ. ராசாவுக்கு எதிராக நீலகிரி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் . மத்திய சென்னையில் திமுகவின் தயாநிதி மாறனை எதிர்த்து பாஜக சார்பாக வினோஜ் பி செல்வமும் வேலூரில் ஏ.சி. சண்முகமும் போட்டியிடுகின்றனர்.


திருநெல்வேலி தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனும் பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தரும் போட்டியிடுகின்றனர். பாஜக பலம் வாய்ந்ததாக கருதப்படும் கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். கிருஷ்ணகிரியில் பாஜக சார்பாக சி. நரசிம்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.