எப்போது எந்த தேர்தல் வந்தாலும் முதலில் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ஜெயலலிதா, நேற்று திமுக வேட்பாளர் பட்டியல் காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னராக திடிரென அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. திமுகவிற்கு முன்னர் வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அவர் இரவில் எடுத்த திடீர் முடிவு காலையில் நடந்தது.


2ஆம் கட்ட வேட்பாளர் அறிவிப்பில் சுவாரஸ்சியம்


இன்று 2ஆம் கட்ட வேட்பாளர்களை அறிவித்த எடப்பாடி பழனிசாமி, திமுகவில் இருந்து அதிமுகவிற்கு வந்து 14 நாட்களே ஆன ஒருவருக்கு நெல்லை தொகுதியில் போட்டியிட சீட் வழங்கியிருக்கிறார்.  அவர்தான் சிம்லா முத்துச் சோழன். ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா வேட்பாளராக நின்றபோது அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டு பிரபலமானவர்.


நெல்லையில் போட்டியிடும் திமுக முன்னாள் அமைச்சரின் மருமகள்


திமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னையால் கடந்த 7ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தவருக்கு உடனடியாக நெல்லை தொகுதியை ஒதுக்கியிருக்கிறார் ஈபிஎஸ்.  சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிட்டவருக்கு நெல்லை தொகுதி ஏன் என்ற கேள்வி எழலாம். சிம்லா முத்துச்சோழனின் பூர்வீகம் நெல்லை மாவட்டம்தான்.


திமுக நேரடியாக களம் காணாத நெல்லை - அதிமுக - பாஜக இடையே போட்டியா ?


அவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சராக இருந்த சற்குணபாண்டியனின் மருமகள். அங்கு நேரடியாக திமுக களம் காணாத நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிறுத்தப்படவிருக்கிறார். பாஜக சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக வாக்குகளையும் திமுக முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் ஆதரவு வாக்குகளையும் பெறும் உத்தியாக சிம்லா முத்துச் சோழனுக்கு நெல்லை தொகுதியில் போட்டியிட சீட் வழங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி


இசக்கி சுப்பையா போட்ட பிளான் ஒகே சொன்ன எடப்பாடி பழனிசாமி


அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏவும் நெல்லை மாவட்டத்தில் பலம் வாய்ந்த நபராகவும் விளங்குபவருமான இசக்கி சுப்பையா ஏற்பாட்டிலேயே சிம்லா முத்துச்சோழன் அதிமுகவில் இணைந்துள்ளார். அவரை நெல்லை தொகுதியில் வெற்றி பெற வைக்க இசக்கி சுப்பையாவிற்கு டாஸ்க் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.


அன்றே முடிவு செய்த எடப்பாடி, இன்று அறிவிப்பை வெளியிட்டார்






ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவரை கூட திமுகவில் தக்க வைத்துக்கொள்ள முடியாத வகையில் அந்த கட்சியில் உட்கட்சி பிரச்னைகள் இருப்பதை மையமாக வைத்தும் திமுகவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற பிரச்சாரத்தை சொல்லியும் சிம்லா முத்துச்சோழனை நெல்லை தொகுதியில் வேட்பாளராக நிறுத்த ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருந்த நிலையில், அதற்கான அறிவிப்பையும் இன்று வெளியிட்டுள்ளார்.