நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க. கூட்டணியே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, முன்னணி ஊடகம் ஒன்று வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
எதிர்பார்த்த எண்ணிக்கை கிடைக்காத விரக்தியில் பா.ஜ.க.:
ஆனால், காலை முதல் வெளிவந்த தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பா.ஜ.க. கூட்டணி வெறும் 291 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது.
இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு மற்றும் இன்னபிற தலைவர்கள் ஆதரவு அளித்தால் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் வாய்ப்பு பிரகாசம் ஆகும். இதனால், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் பா.ஜ.க.வின் முயற்சி தோல்வி அடையவும் வாய்ப்பு உள்ளது.
லாராவால் மட்டும்தான் முடியும்:
இந்த சூழலில், 400 இடங்களை எட்டும் என்று சொல்லப்பட்ட பா.ஜ.க. வெறும் 291 இடங்கள் மட்டுமே பிடித்துள்ளதால் பா.ஜ.க.வை சமூக வலைதளங்களில் பலரும் கேலி செய்து வருகின்றனர். பெரும்பாலோனார் 400-ஐத் தொட பிரையன் லாராவால் மட்டுமே முடியும் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.
2004ம் ஆண்டு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பிரையன் லாரா தனி ஆளாக 400 ரன்களை குவித்து சாதனை படைத்தார். அந்த போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காத பிரையன் லாரா குவித்த 400 ரன்களே ஒரு டெஸ்ட் போட்டியில் தனி நபர் மற்றும் ஒரு கேப்டன் ஒரு இன்னிங்சில் குவித்த அதிகபட்ச ரன் ஆகும். இந்த சாதனை 20 ஆண்டுகளை கடந்தும் இன்றும் முறியடிக்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேர்தல் வரலாற்றில் 400 தொகுதிகளுக்கு மேல் வென்று காட்டிய ஒரே பிரதமராக ராஜீவ்காந்தி ஆவார். அப்போது, அவரது தலைமையிலான காங்கிரஸ் நாடு முழுவதும் 404 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்திய வரலாற்றில் ஒரு தனி கட்சி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது அந்த ஒரு முறை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பா? காங்கிரஸ் தலைவர் கார்கே பரபரப்பு பதில்!
மேலும் படிக்க: Mamata Banerjee: "ராஜினாமா பண்ணுங்க" இந்தியாவுக்கு வெற்றி! மோடி தோற்று விட்டார் - மம்தா பானர்ஜி