Lok Sabha Election Result 2024: உத்தரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட 5 பிரதான மாநிலங்களில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.


டாப் 5 மாநிலங்கள்:


நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முடிவில், யார் ஆட்சி அமைப்பது என்பதை பெரும்பாலும் 5 மாநிலங்கள் தான் தீர்மானிக்கின்றன. அதன்படி, 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசம், 48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா, 42 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கம், 40 தொகுதிகளை கொண்ட பீகார் மற்றும் 39 தொகுதிகள் கொண்ட தமிழ்நாடு ஆகியவை தான், யாருக்கு பெரும்பான்மை என்பதை தீர்மானிக்கின்றன. காரணம் இந்த 5 மாநிலங்களில் மட்டுமே 249 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் இதில் பெரும்பாலான தொகுதிகளை பாஜகவே கைப்பற்ற் இருந்தது. ஆனால், நடப்பு தேர்தலில் பாஜக பெரும் சரிவை சந்தித்துள்ளது.


டாப் 5 மாநிலங்களில் I.N.D.I.A. கூட்டணி ஆதிக்கம்:


மேற்குறிப்பிடப்பட்ட அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட 5 மாநிலங்களில், நான்கில் தற்போது எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதன்படி,



  • உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் I.N.D.I.A. கூட்டணி 47 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி 32 தொகுதிகளிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

  • மகராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில்  I.N.D.I.A. கூட்டணி 29 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி 18 தொகுதிகளிலும், மற்றவை ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

  • மேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில்  திரிணாமுல் காங்கிரஸ் 29 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி 13 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

  • பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் பாஜக அதிகபட்சமாக 32 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. I.N.D.I.A. கூட்டணி 6 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன.

  • தமிழ்நாட்டை பொறுத்தவரை மொத்தமுள்ள 39 தொகுதிகளில், I.N.D.I.A. கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.


அதாவது அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட 5 மாநிலங்களைச் சேர்ந்த 249 தொகுதிகளில், 149 தொகுதிகளில் தற்போதைய சூழலில் I.N.D.I.A. கூட்டணி முன்னிலை வகிக்கிறது.


2019 தேர்தல் நிலவரம்:



  • கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக 62 இடங்களை கைப்பற்ற, சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் சேர்ந்து 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது.

  • கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக 41 இடங்களை கைப்பற்ற, காங்கிரஸ் கூட்டணி வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது.

  • கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளை கைப்பற்ற, பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

  • கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பீகார் மாநிலத்தில் பாஜக 17 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களையும். லோக் ஜனதா தளம் 6 இடங்களையும் வென்றது

  • தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.