Lok Sabha Election Result 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை தொடர்ந்து, மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார் என பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.


ஷாக் அளித்த மக்களவை தேர்தல் முடிவுகள்:


நாடு முழுவதுமுள்ள மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜக கூட இந்த முறை சுமார் 240 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.


அதாவது தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியுள்ளது. அதேநேரம், பாஜக தலைமையிலான கூட்டணி சுமார் 290+ இடங்களில் முன்னிலை வகிக்க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய  I.N.D.I.A. கூட்டணி 230+ இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இரண்டு கூட்டணிகளுக்குமே சுமார் 60 இடங்கள் தான் வித்தியாசம் உள்ளன. இதனால், மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.


மோடி மீண்டும் பிரதமராவார் - பாஜக:


தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும், கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்து, மோடி மீண்டும் பிரதமராவார் என பாஜக தெரிவித்துள்ளது. அப்படி ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவு மிக முக்கியமாக உள்ளது. இந்நிலையில் தான், இன்று கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.


அதில் மேற்குறிப்பிடப்பட்ட 2 கட்சிகளுக்கும் பல முக்கிய சலுகைகள் வழங்கப்பட்டு கூட்டணி ஆட்சி அமைப்பதை பாஜக உறுதி செய்யும் என கூறப்படுகிறது. கூட்டணிக்கு ஆதரவு வழங்கும்படி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், நேற்று முதலே சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமாரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆட்சி அமைக்க I.N.D.I.A. கூட்டணி வியூகம்:


காங்கிரஸ் உள்ளிட்ட ஆட்சி எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணியும் மத்தியில் ஆட்சி அமைக்க வியூகம் வகுத்து வருகிறது. அதன்படி, தற்போது பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக நிதிஷ் குமாருக்கு துணை பிரதமர் பதவி, ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவும்  I.N.D.I.A. கூட்டணி தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.


இதுதொடர்பாக பேசிய ராகுல் காந்தி, நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தங்கள் கூட்டணிக்கு அழைப்பது தொடர்பாக, இன்று நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார். அதேநேரம், நேற்று முதலே எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமாரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, I.N.D.I.A. கூட்டணிக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


எனவே, மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையுமா? அல்லது அந்த கூட்டணியில் இருந்து விலகி சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் I.N.D.I.A. கூட்டணிக்கு ஆதரவு வழங்குவார்களா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.


யார் பக்கம் சந்திரபாபு & நிதிஷ்குமார்:


தற்போதைய சூழலில் மத்தியில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை உறுதி செய்யும் சக்தி, சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரிடம் தான் உள்ளது. இவர்கள் ஆதரவை பொறுத்தே யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரிய வரும். கூட்டணி தர்மத்தின்படி, தங்களுக்கு அவர்களது ஆதரவு இருக்கும் என பாஜக கூறி வருகிறது.


அதேநேரம், மாநில அதிகாரத்தை அழிக்கவும், மாநில கட்சிகளை அழிக்கவும் முற்படும் பாஜகவிற்கு சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமார் ஆதரவு அளிக்கக் கூடாது என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. அதேநேரம், இந்த இரண்டு தலைவர்களும் எந்த நேரத்திலும் கூட்டணியை மாற்றக் கூடியவர்கள் தான் என்பதையே வரலாறு நமக்கு உணர்த்துகிறது. எனவே, மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார்? புதிய பிரதமர் யார் என்ற கேள்வி இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.