நாடாளுமன்றத் தேர்தல்- வேட்புமனு தாக்கல்
2024-ம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி நடைபெற உள்ளது. இதன்படி விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை 20.03.2024 முதல் 27.03.2024 வரை (23.03.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) நீங்கலாக) தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை ஆன்லைனில் பதிவு செய்திடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான இணையதளம் http://encore.eci.gov.in ஆகும்.
ஆனால் வேட்பு மனுவிற்கான கடைசி நாளுக்கு முந்தைய நாள் வரை மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்ய முடியும். ஆன்லைனில் affidavit பதிவேற்றம் செய்யும் வசதியும், ஆன்லைனில் டெபாசிட் தொகை செலுத்தும் வசதியும், ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஆன்லைன் வேட்புமனுவினை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு உரிய ஆவணங்களுடன் நேரில் வேட்பாளரோ/ வேட்புமனுவினை முன்மொழிபவரோ சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ நிர்ணயிக்கப்பட்ட முதன்மை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக ஆன்லைன் மனுவில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம்
வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே ஆகும். காலை 11.00 மணிக்கு முன்னரும் மாலை 3.00 மணிக்கு பின்னரும் வரப்பெறும் வேட்புமனுக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விழுப்புரம் (தனி)
விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதல் தளத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், விழுப்புரம் அவர்களிடமும், நிர்ணயிக்கப்பட்ட முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், விழுப்புரம் அவர்களிடமும் வேட்பு மனுக்களை அளிக்கலாம். மேலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திடும்போது இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தியவாறு கீழ்க்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.சி.பழனி, இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.
வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் முந்தைய நாளிலிருந்து மட்டுமே தேர்தல் செலவினத்திற்காக புதியதாக வங்கி கணக்கினை தொடங்கவேண்டும். ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள வங்கி கணக்கு விவரம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அனைத்து வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அஞ்சலகங்களில் புதியதாக வங்கி கணக்கு தொடங்கலாம். வங்கி கணக்கு வேட்பாளர் பெயரிலோ அல்லது வேட்பாளர் மற்றும் அவரது தேர்தல் முகவர் ஆகியோர் கொண்ட கூட்டு வங்கி கணக்காவோ தொடங்கலாம். வேட்பாளர் அவரது குடும்ப உறுப்பினர்களை கூட்டாக கொண்டு வங்கி கணக்கு தொடங்க கூடாது. வங்கி கணக்கு விவரத்தினை வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தரவேண்டும்.
வேட்பு மனுவுடன் வேட்பாளர் சம்மந்தப்பட்ட Form 26 Criminalization Affidavit ஒன்றினை நோட்டரி பப்ளிக் சான்றுடன் தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய டெபாசிட் தொகை ரூ.12500/- ரொக்கமாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் செலுத்த வேண்டும். (ஆன்லைனில் வேட்பு மனு அளித்தால் ஆன்லைனில் டெபாசிட் தொகை செலுத்தலாம்) காசோலை/ வரைவோலை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் எல்லைக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பாளருடன் 4 நபர்கள் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு வரவேண்டும். அரசியல் கட்சி வேட்பாளர்கள் பிரசார வாகனத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மட்டுமே அனுமதி பெற வேண்டும்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறானாளி வாக்காளர்கள் (Persons with Disability) மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க சம்மந்தப்பட்ட உதவித் தேர்தல் அலுவலர்கள் மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.