ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் சிதறுண்டு, பிறகு பலம் வாய்ந்த அணியாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அஇஅதிமுக தற்போது செயல்படுகிறது. சட்டரீதியாக மோதினாலும், பலன் ஏதும் கிடைக்காமல், என்ன செய்வதென்று தெரியாமல் நகர்ந்துக் கொண்டிருக்கும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும் இயங்குகிறது. டிடிவி தினகரன், அமமுக என்ற கட்சியைத் தனித்து நடத்துகிறார். இவரும் ஓபிஎஸ்ஸும் கிட்டத்தட்டஓரே நேர் கோட்டில் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். மறுபக்கத்தில் சசிகலா, அதிமுக-வை ஓன்றிணைப்பேன் என சவால்விட்டு, தம்மால் முயன்றதை செய்கிறார். ஆனால், பலன்தான் ஒன்றும் கிடைக்கவில்லை.
இந்தச்சூழலில், தற்போதைய நாடாளுமன்ற மக்களவைத்தேர்தலில், ஈபிஎஸ் தலைமையில் அஇஅதிமுக களம் காண்கிறது. மெகா கூட்டணி அமைப்பேன் என்றார் எடப்பாடியார். ஆனால், தற்போது தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் போன்ற கட்சிகளுடன் மட்டும் களம் காண்கிறார். பல மாதங்களாக, தமது தலைமையின் கீழ், பிரிந்துச் சென்றோர் வந்து இணையலாம் என கூறினாலும், ஒரு சிலருக்கு மட்டும் 144 தடை உத்தரவு போட்டிருக்கிறார் அவர். ஆனால், பழைய பலத்தில் அதிமுக இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. 2 கோடி தொண்டர்களின் செல்வாக்குடன் அதிமுக இருக்கிறது என ஈபிஎஸ் அணியினர் தெரிவித்தாலும், பிரிந்துச் சென்றோரின் செல்வாக்கு குறையாகவே, பொதுவானவர்களால் பார்க்கப்படுகிறது.
தான்தான் அதிமுக பொதுச் செயலாளர் என சசிகலா ஒருபக்கம் அறிக்கைகளைக்கொடுத்துக் கொண்டு சட்டப்போராட்டமும் நடத்திக் கொண்டிருக்கிறார். இதுவரை எந்த வெற்றியும் இல்லை. அதேபோல், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரும் அதிமுக மீண்டும் ஒன்றிணையும் என பல முறை நம்பிக்கை தெரிவித்தாலும், அதற்கான நகர்வுகள் பெரிதாக நடைபெறவில்லை. பெரும்பாலோர் மறுபக்கம் இருப்பதால், இப்பக்கத்திற்கு சட்டரீதியாகவும் பெரிய வெற்றிகள் ஏதுமில்லை. எனவே, தற்போதைக்கு ஈபிஎஸ் அணிதான், அதிமுக என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால், பழைய மெகா பலம் இருக்கிறதா என்பதில்தான் சந்தேகம் இருக்கிறது.
சசிகலாவின் சபதம்!!!
இந்தச்சூழலில்தான், தேர்தல் குறித்தும் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்தும் சசிகலாவிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மக்கள் முடிவு செய்வார்கள் எனத் தெரிவிக்கும் சசிகலா, அதிமுக-வில் தற்போது பங்காளிச் சண்டை நடப்பதால் தம்மால் உடனடியாக எதுவும் செய்ய முடியவில்லை என்பதுடன், தேர்தல் முடிந்தவுடன் அதிமுக ஒன்றிணையும் என உறுதியுடன் தெரிவித்தார். அதுமட்டுமல்ல, புயலுக்கு முன் அமைதி என்பது போல், அண்மைக்காலமாக தாம் அமைதியாக இருப்பதற்கான விடை விரைவில் தெரியும் என்றும் சூசகமாகத் தெரிவித்தார். மேலும், வரும் 2026-ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில், ஒன்றிணைந்த அதிமுக-வாக தேர்தலைச் சந்திப்போம் என சபதம் ஏற்கும் வகையில் உறுதியுடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சசிகலாவின் பேச்சு, தேர்தலுக்குப் பின், அதிமுக-வினர் ஒன்றிணையும் வகையில் ஓர் சூழல் ஏற்படும் என்பதைதான் சொல்லாமல் சொல்கிறார் என்பதே பலரின் புரிதலாக இருக்கிறது. எது எப்படியோ, பழைய அதிமுகவா, பழைய பலத்துடன் வர வேண்டும் என்பதுதான, அதிமுக தொண்டர்களின் கனவு மட்டுமல்ல, அப்படி வரும் போது, தமிழகத்தின் அரசியல் களமும் சுடச்சுட இருக்கும் என்பது நிச்சயம்.