காரைக்குடியில் நடக்க இருந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து அமித்ஷா காரைக்குடியில் ரோடு ஷோ நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


என்ன காரணம்..? 


பிரதமர் மோடியை தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாட்டில் பாஜக மக்களவை தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா 2 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். 


இதையடுத்து, நாளை சிவகங்கை வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித்ஷா ரோடு ஷோவில் பங்கேற்க இருந்தார். சென்னை தி நகரில் நேற்று முன் தினம் பிரதமர் மோடி ரோடு ஷோவில் பங்கேற்றார். அதில் போதிய வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது. 


இதன் காரணமாக, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பாஜகவின் ரோடு ஷோவுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இல்லை என கூறப்பட்ட நிலையிலும், சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் ரூ. 525 கோடி நிதி மோசடி செய்ததாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளதாலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  


உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் திட்டம்:


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 4 ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட இரண்டு நாள் தமிழகப் பயணமாக ஏப்ரல் 12ஆம் தேதி மதுரை வருகிறார். சிவகங்கை வேட்பாளர் டி.தேவநாதன் யாதவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக அமைச்சர் ஷா வெள்ளிக்கிழமை மதியம் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கி காரைக்குடிக்கு செல்வார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மதுரை வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனுக்கு வாக்கு சேகரிக்க மதுரை செல்வதற்கு முன், அமித்ஷா புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள கோவிலில் பிரார்த்தனை செய்ய இருக்கிறார். அதன் பின்னர், நாளை இரவு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கும் செல்ல இருக்கிறார். 


அடுத்த நாளான அதாவது வருகின்ற சனிக்கிழமை காலை, உள்துறை அமைச்சர் அமித்ஷா கன்னியாகுமரிக்கு புறப்பட்டு, மக்களவை தொகுதி வேட்பாளரான பொன் ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு கேட்டு ரோடு ஷோவில் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து, திருவாரூர் செல்வதற்கு முன், நாகப்பட்டினம் வேட்பாளர் எஸ்ஜிஎம் ரமேஷுடன் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவார்.


இதையடுத்து, தூத்துக்குடி வரை விமானத்தில் புறப்பட்டு தென்காசி செல்கிறார். அங்கு ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து தமிழ்நாட்டில் தனது பயணத்தை முடித்துகொண்டு டெல்லி திரும்புகிறார். முன்னதாக, அமித்ஷா முதலில் இந்த மாத தொடக்கத்தில் மாநிலத்திற்கு வர திட்டமிடப்பட்டிருந்தது. அதுவும் ஒரு சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.