இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று ஏப்ரல் 11ம் தேதி ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ரமலான் அல்லது ரம்ஜான் என்பது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இஸ்லாமிய பண்டிகைகளில் முக்கியமானதாகும்.


புனித ரமலான் பண்டிகை தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் சிறப்பு தொழுகை மேற்கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர். இந்தநிலையில், தமிழ்நாட்டில் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்: 






நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: 






தமிழ்நாடு பாஜக கட்சி தலைவரும், கோவை பாஜக மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை வெளியிட்ட பதிவில், “புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், தமிழ்நாடு பாஜக  சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் இந்த தினம், அமைதியையும், மகிழ்ச்சியையும், ஆசீர்வாதங்களையும் தந்து, அனைவர் வாழ்விலும் அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், நல்லிணக்கம் மற்றும் செழிப்பை அளிக்க கூடிய நன்னாளாக அமையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.” என தெரிவித்திருந்தார். 


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்






விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், “அனைவருக்கும் இனிய ரமலான் பெருநாள் நல்வாழ்த்துகள். அன்பையும் அமைதியையும் போதித்து மனிதகுலத்தை நல்வழிப்படுத்திச் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்!” என தெரிவித்துள்ளார்.


மக்கள் நீதி மய்யம் - கமல்ஹாசன்






மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல் தனது எக்ஸ் பக்கத்தில், “ரம்ஜான் பெருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.