Investment Tips: தற்போதைய சூழலில் EPF கணக்கு வைத்திருப்பவர்கள்  மட்டுமே VPF கணக்கைத் திறக்க முடியும். அதேநேரம், வேலை இல்லாதவர்களும்  PPF கணக்கைத் திறந்து முதலீடு செய்யலாம்.


PPF Vs VPF  விவரங்கள்:


பணியிலிருந்து  ஓய்வு பெற்ற பிறகு எதிர்கால அல்லது நிதிப் பாதுகாப்பிற்காகச் சேமிக்க பல முதலீட்டு வழிகள் உள்ளன. பாதுகாப்பு நலன் கருதி பலர் அரசு ஆதரவு பெற்ற திட்டங்களயே தேர்வு செய்கின்றனர். அவற்றில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) ஆகியவை பிரபலமான திட்டங்களாகும். . 


தன்னார்வ வருங்கால வைப்பு நிதி என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF),  கூடுதல் பங்களிப்ப வழங்க மத்திய அரசு வழங்கும் வாய்ப்பாகும். பொதுவாக, ஊழியர்கள் தங்களது சம்பளத்தில் 12 சதவிகிதத்தை EPF கணக்கில் டெபாசிட் செய்வார்கள். நிறுவன உரிமையாளரும் அதே கணக்கில் அதே அளவிலான தொகையை டெபாசிட் செய்வார். ஒருவேளை ஊழியர் வழக்கமான EPF பங்களிப்பிற்கு அப்பால் சேமிக்க விரும்பினால், VPF திட்டம் பயனுள்ளதாக இருக்கும். VPF என்ற பெயரில் ஊழியர் டெபாசிட் செய்யும் அதிகப்படியான பணம் அனைத்தும் EPF கணக்கில் சேமிக்கப்படுகிறது.


கணக்கை திறப்பது எப்படி?


PPF கணக்கை தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் தொடங்கலாம். கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் ஆன்லைனில் PPF கணக்கைத் திறக்கும் வசதியை கொண்டுள்ளன. அதேநேரம்,  VPF கணக்கைத் தொடங்க விரும்பினால்,  ஊழியர் நிறுவனத்தின் HR ஐ சந்திக்க வேண்டும்.


PPF Vs VPF தகுதிகள் என்ன?


தற்போதைய சூழலில்  EPF கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் மட்டுமே VPF கணக்கை திறக்க முடியும். அதேநேரம், வேலை இல்லாவிட்டாலும் PPF கணக்கைத் திறந்து முதலீடு செய்யலாம்.




முதலீட்டிற்கான வரம்பு: 


PPF கணக்கை வெறும் 100 ரூபாய் முதலீட்டுடன் தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 டெபாசிட் செய்யப்பட வேண்டும், அதே ஆண்டில் ரூ.1,50,000க்கு மிகாமல் முதலீடு செய்யலாம். VPF இல் குறைந்தபட்ச கணக்கு வரம்பு இல்லை. அதிகபட்ச வரம்பை பொறுத்த வரையில்., ஊழியரின் அடிப்படை சம்பளம் + டிஏவுக்கு இணையான தொகைக்கு மேல் டெபாசிட் செய்ய அனுமதி இல்லை.


வட்டி விகிதம்:


2024 ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கு PPF கணக்கில் 7.10 சதவீத வட்டியை மத்திய அரசு செலுத்தும். VPFக்கு வரும்போது, ​​EPF க்கு வழங்கப்படும் வட்டி விகிதமே பொருந்தும். 2023-24 நிதியாண்டில் EPF கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவிதமாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.


பணம் எடுப்பது எப்படி?


PPF கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். வேண்டுமானால் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். கணக்கு தொடங்கிய ஆறாவது நிதியாண்டிலிருந்து குறிப்பிட்ட அளவு பணத்தை எடுக்கலாம். வங்கிகளும் பிபிஎஃப் கணக்கின் அடிப்படையில் கடன் வழங்குகின்றன. ஓய்வு பெறும் வரை VPFல் பணத்தை டெபாசிட் செய்யலாம். ஓய்வு பெற்ற பிறகு EPF பணத்தை எடுக்கலாம்.  தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேலையின்மை ஏற்பட்டால், VPF முழு நிலுவைத் தொகையையும் திரும்பப் பெறலாம். வேறு சில அவசரக் காரணங்களுக்காகப் பகுதித் தொகையை திரும்பப் பெறலாம்.


வருமான வரிச் சலுகை:


பிரிவு 80C வருமான வரிச் சட்டமானது EPF-ல் டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கும் VPF-ல் டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கும் பொருந்தும். ஒரு நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெறலாம். இதற்கு மேல் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வரி விதிக்கப்படும். PPF முதலீடுகளுக்கு பிரிவு 80சி கீழ் ரூ.1.50 லட்சம் விலக்கு கிடைக்கும். இந்தக் கணக்கில் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கும் வரி விலக்கு வழங்கப்படுகிறது.