சேலம் நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "19 ஆம் தேதி வாக்குச்சாவடிக்கு சென்று திமுக கூட்டணி வேட்பாளர்களை பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். ஆனால் பிரசாரத்தில் மக்கள் எழுச்சியைப் பார்க்கும் போது ஏற்கனவே முடிவெடுத்து விட்டது தெரிகிறது. திமுக கூட்டணிக்கு போடும் ஓட்டு, மோடிக்கு போடும் வேட்டு. மோடி தமிழகத்திற்கு நிறைய வேட்டு வைத்துள்ளார். அவருக்கு பதில் வேட்டு நாம் கொடுக்க வேண்டும். சேலத்தில் குறைந்தது 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலைப் போல வாக்காளர்கள் மீண்டும் தவறு செய்துவிடக்கூடாது.


ரூ.548 கோடி மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டம், சேலம் அரசு சட்டக் கல்லூரிக்கு ரூ.102 மதிப்பில் விடுதி கட்டடம், ரூ.97 கோடி மதிப்பில் பழைய பேருந்து நிலையம் புனரமைப்பு, ரூ.81 கோடி மதிப்பில் பள்ளப்பட்டி ஏரி, போடிநாயக்கன்பட்டி ஏரி,அல்லிகுட்டை ஏரி, மூக்கனேரி சீரமைப்பு, ரூ.34 கோடி மதிப்பில் சாலை சீரமைப்பு, சேலம் அரசு மருத்துவமனைக்கு ரூ.30 கோடி மதிப்பில் உயர் அறுவை சிகிச்சை கருவிகள் என வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன. சேலம் கருப்பூரில் டைடல் பூங்கா விரைவில் பயன்பாட்டுக்கு வரும், அரியாகவுண்டம்பட்டி ரூ.25 கோடியில் வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர் பயன்பாட்டு மையம், ரூ.5.20 லட்சம் புதிய நூலகம், சேலம் மாநகராட்சியில் சுத்திகரிப்பு நிலையம், கூடுதல் நகர்ப்பற சுகாதார நிலையம், ஜவுளி, கயிறு உற்பத்தி அதிகரிக்க ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65, சிலிண்டர் ரூ.500 என விலை குறைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும். இந்த அனைத்து கோரிக்கையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது.


 


தமிழ்நாட்டு மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தை மக்களால் மறக்க முடியாது. சசிகலா காலில் விழுந்து முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி அவருக்கே துரோகம் செய்து விட்டார். மீண்டும் அவரின் காலில் விழ எடப்பாடி பழனிசாமியால் முடியாது. அவர் ஆளுக்கு தகுந்த மாதிரி பேசி வருகிறார். அவரைப் போல திமுகவினர் பச்சோந்தி கிடையாது. அரசின் திட்டத்தை எந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை பெண்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். மகளிர் இலவச பேருந்து பயணத்தை மாநிலம் முழுவதும் 468 கோடி முறை மேற்கொண்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் 20 கோடி பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த திட்டத்தை கர்நாடகா மாநிலம் விரிவுபடுத்தியுள்ளது.


புதுமைப் பெண் திட்டம் பெண்கள் உயர்கல்விக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 3 லட்சம் பேரும், சேலம் மாவட்டத்தில் 20 ஆயிரம் பேரும் பயனடைந்து வருகின்றனர். மாணவர்களுக்காக தமிழ்ப்புதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு உதவிடும் வகையில், காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 18 லட்சம் குழந்தைகளுக்கு 30 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு மேல் வழங்கப்படுகிறது. இந்திய அளவில் முதல்முறையாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. திமுக அரசின் காலை உணவுத் திட்டத்தை கனடா நாட்டில் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். தமிழக மாணவர்களுக்கு மட்டுமல்ல, உலக அளவில் அனைத்து மாணவர்களுக்குமான தலைவராக ஸ்டாலின் உள்ளார்.


 


மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்தவர்களில் 85 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள மற்றவர்களுக்கும் வழங்கப்படும். தற்போது ஒரு கோடி பேருக்கு மேல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் 6 லட்சம் பேருக்கு மேல் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கலைஞர், ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு வரவில்லை. அவர்களுக்கு ஆட்சியில் இருந்த அடிமைகளை பயன்படுத்தி நீட் தேர்வு கொண்டு வந்துவிட்டனர். அரியலூர் அனிதா தொடங்கி இதுவரை 22 மாணவர்கள் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்டனர். நம்முடைய  கல்வி உரிமை, நிதியுரிமையை பாஜக அரசு பறித்துக் கொண்டது. மக்களுக்காக தமிழகம் வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தலுக்காக அடிக்கடி வருகிறார். 2026-ம் ஆண்டு வரை தமிழகத்திலேயே வீடு எடுத்து தங்கி இருந்தாலும், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவிற்கு ஒரு சீட் கூட கிடைக்காது. புயல் மழை வெள்ளத்தின் போது தமிழ்நாடு கேட்ட நிதி வழங்காத பிரதமரை 29 பைசா பிரதமர் என்றே அழைக்க வேண்டும்.


ஜி.எஸ்.டி வரி நாம் கட்டுவதில் ஒரு ரூபாய்க்கு வெறும் 29 பைசாதான் திரும்பத் தருகிறார். பிஜேபி ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேச மாநிலத்திற்கு ஒரு ரூபாய்க்கு மூன்று ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. பீகார் மாநிலத்திற்கு ஒரு ரூபாய்க்கு ரூ.7 தருகிறார். 15 நாள் பிரசாரத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு கறுத்து விட்டேன். குரலும் போய் விட்டது. ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்து சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது அரசின் திட்டத்தினால் பயனடைந்தவர்கள் இருப்பார்கள். சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மோடியின் முயற்சிக்கு துணை போனவர் எடப்பாடி பழனிசாமி. மோடி சொல்லும் திருக்குறள் யாருக்கும் புரிவதில்லை. ஜூன் 3-ம் தேதி கலைஞரின் 101-வது பிறந்தநாள் வருகிறது. தேர்தல்களின் தோற்காத ஒரே தலைவர். கலைஞரின் பிறந்தநாள் பரிசாக 40-க்கு 40 ஜெயிக்க வேண்டும்" என்றார்.