தஞ்சாவூர்: டெல்டாவில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த நவீன அரிசி ஆலை ஏற்படுத்தப்படும் என்று தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுதாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசியதாவது: உதயசூரியன் சின்னத்துல ஏப்ரல் 19-ந் தேதி நமது வேட்பாளர் சுதாவுக்கு நீங்க போடுறீங்களே ஓட்டு. அது தான் பிரதமர் மோடிக்கு நாம் வைக்கும் வேட்டு. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் மிகபெரிய வெற்றியை கொடுத்தீர்கள். 39 தொகுதிகளில் வெற்றி பெற செய்தீர்கள். இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்யுங்கள். கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் ராமலிங்கம் அவர்களுக்கு இதே இடத்தில் தான் பிரச்சாரம் செய்தேன். அவரை கிட்டத்தட்ட 2 லட்சத்து 62 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற வைத்தீர்கள்.
கும்பகோணத்தில் நடந்துள்ள முக்கிய பணிகள்
கடந்த முறை போல் வாக்களித்து தமிழகத்தில் முதன்மை தொகுதியாக மாற்ற வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் செய்துள்ள சில பணிகளை மட்டும் குறிப்பிடுகிறேன். கும்பகோணத்தில் ரூ.700 கோடி மதிப்பீல் நவீன வணிக வளாகங்கள், சாலை பணிகள், பாதாள சாக்கடை, குடிநீர் வடிகால்கள் பூங்கா மேம்பாட்டு பணிகள் நடந்துள்ளன. ரூ.81 கோடியே 41 லட்சம் மதிப்பீல் சாலை, குடிநீர், அங்காடிவாடி, சமுதாய நல கூடங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது.
ரூ.212 கோடி மதிப்பில் காவிரி மற்றும் கிளை ஆறு புணரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ரூ.400 கோடியே 8 லட்சம் மதிப்பீல் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி அருகே நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். இந்தியா கூட்டணி சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கவேண்டும் என்று என்பது உங்கள் நீண்ட கால கோரிக்கை.
நவீன அரிசி ஆலை ஏற்படுத்தப்படும்
இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய ஆய்வு செய்து விரைவில் அறிவிப்பார். டெல்டாவில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த நவீன அரிசி ஆலை ஏற்படுத்தப்படும். கைத்தறி பட்டு உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், கைத்தறி பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிப்பது. பட்டு மற்றும் ஜவுளி பூங்கா ஜவுளி சந்தைகள் அமைத்து தரப்படும். மகாமக திருவிழாவை தேசிய திருவிழாவாக அறிவித்து, கும்பகோணம் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றி தரப்படும். மகாமக திருவிழா காலங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அண்ணலக்ரஹாரம், தாராசுரம், பாபநாசம் பகுதிகளில் மேம்பாலம் அமைத்து தரப்படும்.
சுவாமிமலை நாச்சியார் கோவில் புறவழிச்சாலை அமைக்கப்படும்
தஞ்சை-விழுப்புரம் இடையே ரெயில் பாதை இரட்டை வழி பாதையாக மாற்றப்பட்டு சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்கப்படும். சுவாமிமலை நாச்சியார் கோவில் புறவழிச்சாலை அமைத்து தரப்படும். முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மாநில அனைத்து உரிமையும் மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டு அ.தி.மு.க. , பா.ஜ.க. எந்த உறவும் இல்லை என்று தேர்தல் நாடகம் ஆடுகிறார். முதல்-அமைச்சர்
பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம்
மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த உடனே கையெழுத்திட்ட 5-ல் ஒன்று பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் தான். இந்த 3 ஆண்டுகளில் மகளிர் கட்டணமில்லா 460 கோடி பயணங்கள் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். இதன் மூலம் மகளிர் மாதந்தோறும் ரூ.900 வரை சேமிக்கின்றனர். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 13 கோடியே 5 ஆயிரம் பயணங்களை செய்துள்ளீர்கள். இதேபோல் புதுமைப்பெண் திட்டம், முதல்வரின் காலை உணவு திட்டம் பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். இப்படி இந்தியா மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் திராவிட மாடல் அரசு முன்மாதிரியாக உள்ளது.
பிரதமர் மோடியை 29 பைசா என்றுதான் அழைக்க வேண்டும்
இனி பிரதமர் மோடியை 29 பைசா என்றுதான் அழைக்க வேண்டும். நாம தமிழகத்தில் இருந்து ஜி.எஸ்.டி. வரி கட்டுறோம். மத்திய அரசுக்கு ரூ.1 செலுத்துகிறோம். நாம ரூ.1 செலுத்த நமக்கு திருப்பி எவ்வளவு தெரியுமா. 29 பைசாதான் தருகிறார். உத்தரபிரதேசத்தில் ரூ.3 திருப்பி கொடுக்கிறார். பீகாரில் ரூ.1க்கு ரூ.7 கொடுக்கிறார். இவ்வாறு நிதி நெருக்கடி, கல்வி உரிமை பறித்து விட்டார். நீட் தேர்வை கொண்டு வந்து 22 பேர் இறந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். இது அனைத்து நடக்கவேண்டும் என்றால் ஏப்ரல் 19-ந் தேதி வாக்குச்சாவடிக்கு சென்று நமது வேட்பாளர் சுதாவுக்கு வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தி வெற்றி பெற செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.