ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று, ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன் வயல் என்னுமிடத்தில் உள்ள ஒரு தேநீர் கடையில் வாழைக்காய் பஜ்ஜி போட்டு வாக்கு சேகரித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
இந்திய பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் 19ஆம் தேதி வாக்கு தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதிலும் அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் பிரச்சார யுக்தியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கையாண்டு வருகிறார்கள். அதிலும் வாக்காளர்களை கவரும் விதமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ராமநாதபுரத்தில் வாக்கு சேகரிப்பின்போது, முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் 'அச்சந்தன்வயல்' பகுதியின் சாலையின் ஓரத்தில் இருந்த ஒரு தேநீர் கடையில், அந்த கடையில் பணிபுரியும் பணியாளர் பஜ்ஜி போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து, 'நானும் பஜ்ஜி போடுகிறேன்' எனக்கு கூறி அவரிடமிருந்து சீவப்பட்ட வாழைக்காய் துண்டுகளை வாங்கி கடலை மாவில் முக்கி எண்ணெய் கொப்பரையில் போட்டு பஜ்ஜி சுட்ட விதம் அனைவரையும் கவர்ந்தது.
மேலும், அந்தப் பகுதியில் தனக்கு வழங்கப்பட்டுள்ள 'பலாப்பழம்' சின்னத்தை குறிப்பிட்டு தனக்கு பலாப்பழம் சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகி பரவி வருகிறது.