விழுப்புரம்: இந்தியாவிலேயே 400க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற போவதாகவும், பானை சின்னத்தை முடக்குவதற்காக யார் என்ன செய்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் நமது வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என அமைச்சர் பொன்முடி பேசினார்.
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் திமுக கூட்டணியிலுள்ள விசிக வேட்பாளர் துரை ரவிக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் அமைச்சர் பொன்முடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, சமுதாய சீர்திருத்த கொள்கைகளை உடைய ரவிக்குமாரும், திருமாவளவனும் தமிழுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பவர்கள் என்றும் இவர்களை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள் என தெரிவித்தார். சின்னம் பெரிதல்ல தலைவர் ஸ்டாலின் யாரை நிறுத்தி உள்ளார்களோ அவரை வெற்றி பெற செய்யவேண்டும், இந்தியாவிலேயே 400 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற போவதாகவும், பானை சின்னத்தை முடக்குவதற்காக யார் என்ன செய்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் நமது வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டுமென அமைச்சர் பொன்முடி வலியுறுத்தினார்.
விசிக தலைவர் திருமாவளவன் பிரச்சார வாகனத்தில் பேச்சு...
பாஜக கடந்த பத்தாண்டுகளில் ஆட்சி செய்ததில் எந்த வளர்ச்சியும் இல்லை பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. தேர்தலுக்காக பெட்ரோல் டீசல் விலையை குறைத்து மோடி நாடகமாடுகிறார். கார்ப்பரேட் முதலாளிகளுக்காக மோடி பாடுபடுவதாகவும், சாதி வெறியையும் மத உணர்வினை தூண்டுவது தான் பாஜக மோடியின் செயலாக உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் செயலை தான் பாஜக அரசு செயல்படுவதாகவும், விசிக கட்சிக்கு அதிகாரத்தை வழங்கி இருப்பவர் தான் ஸ்டாலின் என்றும் திமுகவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியால் அரசியல் செய்ய முடியவில்லை என்பதால் அண்ணாமலை நாள்தோறும் பேட்டி கொடுத்து வருதாக தெரிவித்தார்.
இந்திய நாட்டினை காப்பாற்ற வேண்டுமென இந்தியா கூட்டணியை உருவாக்க ஸ்டாலின் செயல்பட்டதாகவும், பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுக்கு இந்த தேர்தலில் பாடத்தினை புகட்ட வேண்டுமெனவும் இந்த தேர்தலுக்கு பிறகு இந்த கட்சியினர் காணாமல் போய்விடுவார்கள் என்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என கூறினார். சமூக நீதியின் குரல், பெரியாரின் குரல், அம்பேத்கரின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.