உதவிப் பேராசிரியர் பணிக்கும் இளநிலை ஆராய்ச்சிப் படிக்கும் இதுவரை நடத்தப்பட்டு வந்த நெட் நுழைவுத் தேர்வு, இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நடத்தப்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நெட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு அடிப்படையில் இனி முனைவர் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கு வெவ்வேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தி வந்தன. இதனால் ஒரே தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் மூலம் மாணவர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இதுகுறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஜிசியின் 578ஆவது கூட்டம் மார்ச் 13ஆம்தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2024- 25ஆம் கல்வி ஆண்டில் இருந்து நெட் தேர்வு அடிப்படையில், பிஎச்டி மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
நெட் தேர்வு; ஓர் அறிமுகம்
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணினி மூலம் நடத்தப்படுகிறது. ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது.
இந்த நிலையில், 2024 ஜூன் முதல், நெட் தேர்வர்கள் 3 பிரிவுகளின் அடிப்படையில் தகுதிபெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
என்னென்ன பிரிவுகள்?
பிரிவு 1: இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகையோடு பிஎச்டி மாணவர் சேர்க்கைக்குத் தகுதி மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கும் தேர்வு
பிரிவு 2: இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை இல்லாமல் பிஎச்டி மாணவர் சேர்க்கைக்குத் தகுதி மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கும் தேர்வு
பிரிவு 3: பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கு மட்டும் தகுதி, அதே நேரத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை, உதவிப் பேராசிரியர் பணிக்கும் தேர்வில்லை.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.ugc.gov.in/pdfnews/3720447_PUBLIC-NOTICE-NET.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
தேர்வர்கள் இ- மெயில் முகவரி: ugcnet@nta.ac.in
கூடுதல் தகவல்களுக்கு https://ugcnet.nta.ac.in/