Lok Sabha Election 2024 : பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் பிரச்சாரம் மேற்க்கொண்டார். அப்போது மக்களிடையே பேசியதாவது: அருண் நேரு நாடாளுமன்ற உறுப்பினராக டெல்லி செல்ல வேண்டும். இந்த தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல வாழ்வுரிமைக்கான போர். இந்தியா கூட்டணியை உருவாக்க ஸ்டாலின் மேற்கொண்ட பணிகளை நாடு அறியும். முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுகவை எதிரியாக கொள்ளாமல் அகில இந்திய அளவில் பயணம் மேற்கொண்டு பல்வேறு கட்சியினரை சந்தித்து பேசி கூட்டணியை உருவாக்கினார். பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஸ்டாலினின் முயற்சி தான் இந்தியா கூட்டணி. ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்ரையை  கன்னியாகுமரியில் தொடங்கிய போதும் அதனை முடித்தப் போதும் உடன் இருந்தவர் முதல்வர் மு‌.க.ஸ்டாலின். கடந்த 10 ஆண்டு மோடி ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. டீ, கேஸ், அரிசி உள்ளிட்ட அனைத்தும் உயர்ந்துள்ளது.




தவறான பொருளாதார கொள்கை


மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாடு பாதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதால்தான் வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்றார். ஆனால் இன்று கோடிக்கணக்கானோர் வேலையின்றி இருக்கிறார்கள். கருப்புப்பணத்தை மீட்டு 15 இலட்சம் கொடுப்பேன் என்றார். ஆனால் எதுவும் செய்யவில்லை. கலைஞர், ஜெயலலிதா இல்லாத நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றலாம் என மோடி திட்டமிட்டு பல முறை‌ தமிழ்நாட்டிற்கு வந்து செல்கிறார். மோடியின் ஆட்சியில் நாடு வளரவில்லை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. மோடியின் ஆட்சியில் அதானி மற்றும் அம்பானி மட்டுமே வளர்ச்சிடைந்துள்ளார். ஒரு சாதாரண ஒப்பந்ததாராக இருந்த அதானி இன்று உலகப்பணக்காரர்கள் வரிசையில் 4வதாக இருக்கிறார். மோடி பிரதமரானால் ரேசன் கடை இருக்காது, இட ஒதுக்கீடுகள் இருக்காது, 100 நாள்‌ வேலைவாய்ப்புத்திட்டம் இருக்காது, சாதி, மத சண்டைகள்‌ தான் இருக்கும்.‌ ஹிட்டன்பார்க் அறிக்கையில் மோடி அரசில் அதானி செய்த ஊழல்கள் வெளியாகிது. 




அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஆபத்து


அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை ஏவி தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் 6500 கோடி ரூபாயை பணம் பறித்துள்ளனர் பாஜக. இவர்களை அகற்றத்தான் ராகுல், ஸ்டாலின், மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் கைகோர்த்துள்ளனர். மோடி மீண்டும் பிரதமரானால் அம்பேத்கர் வகுத்தளித்த அரசமைப்பு சட்டத்திற்கு ஆபத்து. பாஜக எம்.பி. ஆனந்த் குமார் ஹெக்டே அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்று வெளிப்படையாக பேசி வருகிறார். காஷ்மீரில் சிறப்பு அதிகாரத்திற்கான சட்டப்பிரிவை பாஜக பறித்தது. மதம் சார்ந்து குடியுரிமை வழங்கும் குடியுரிமைச்சட்டத்தை எதிர்த்து தேசம் காப்போம் என்று பேரணி நடத்தினோம். மோடி பிரதமரானால் சிறுபான்மையினருக்கு ஆபத்து, அவர்கள் வழிபாடு தலங்கள் உடைக்கப்படும்.  சமூக நீதி‌பேசும் பாமக இன்று சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க மறுக்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை இயற்றியது மோடியா ? ஸ்டாலினா?. அதிமுகவில் ஒரே ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றால்கூட அவர்கள் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பார்கள். தொழிலாளர்கள்- விவசாயிகள் - சிறுபான்மையினருக்கு எதிரான பாஜக-வின் சட்டங்களுக்கு ஆதரவு அளித்தது அதிமுக- பாமக.‌ இன்று அரசியல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் பாஜக - அதிமுக தனித்தனியாக நிற்கிறது. பாஜக வெற்றிப்பெற்றால் அரசமைப்புச்சட்டம் இருக்காது வருணாசிரம சட்டம் தான் இருக்கும். டெல்லி தலைநகராக இருக்காது காசி தான் இருக்கும். 


 




சமூக நீதியை பாதுகாக்கவே திமுக - விசிக கூட்டணி


இந்த தேர்தல் அம்பேத்கர் வாரிசுகளுக்கும் கோல்வால்கர் தொண்டர்களுக்கும் இடையே நடக்கும் போர். அண்ணாமலையை வரச்சொல்லுங்க விவாதிப்போம். நான் தேவையில்லை கட்சியின் கிட்டுவே போதும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தான் தனது ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் அம்பேத்கர். மண்டல் கமிஷன் தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடுகள் வழங்க பரிந்துரை செய்தது. பின்னர் வி.பி.சிங் தலைமையிலான அரசு தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டம் நடத்திய கட்சி பாஜக. மேலும் விபி சிங் அரசை கவிழ்த்தவர்கள் பாஜக.


இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என்று மோடி பேசுவாரா?. பாஜகவை எதிர்காமல் இருந்திருந்தால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கமாட்டார்‌. பொன்முடியின் பதவிக்கு ஆபத்து வந்திருக்காது. பல்வேறு நெருக்கடிகள் இருந்தும் கலைஞரிடம் அரசியல் கற்ற அரசியல் வாரிசு மு.க.ஸ்டாலின் அதனை தவிர்த்து சமூக நீதிக்காக விசிக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளார்.


அருண் நேருவும் அவரது தந்தையின் வழியில் மக்கள் பணியாற்ற வந்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வுகளை மாநில அரசின் முடிவிற்கே விடப்படும் என்றது, பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை வலுப்படுத்தும். இந்த தேர்தல் அறிக்கைதான் இந்தியக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர். பெண்களுக்கு உரிமைப்பயணம், உரிமைத் தொகைத் திட்டம் போன்றவற்றை பார்த்து அதிமுக பயப்படுகிறது. இவ்வாறு பேசினார்.