மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என கேள்வி எழுப்பிய திமுக தொண்டரிடம் உனக்காகத்தான் பேசுகிறேன், திமுக கட்சி வேட்டி கட்டிக் கொண்டு பிரச்சனை செய்ற என தொண்டரை கடிந்த தங்கதமிழ்செல்வனால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு ஒன்றிய பகுதிகளில் தேனி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் இரண்டாவது நாளாக தனது பரப்புரையை ஊஞ்சான்பட்டி, வடபுதுப்பட்டி, லட்சுமிபுரம், சருத்துப்பட்டி, ஜல்லிபட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி கிராம பகுதிகளில் தனது பரப்புரையை மேற்கொண்டார். இதில் ஜல்லிபட்டி ஊராட்சியில் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபொழுது, பத்தாண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலையுடன் பத்தாண்டுகளாக மோடி ஆட்சியில் எவ்வளவு விலை உயர்ந்து உள்ளது.
என ஒப்பிட்டு மாதந்தோறும் ஒவ்வொரு குடும்பம் எவ்வளவு அதிக செலவு செய்கிறீர்கள் என்பதை கணக்கிட்டு கூறியதோடு, இந்தியா கூட்டணி ஜெயித்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் எவ்வளவு மிச்சமாகும் கூறி தங்க தமிழ்ச்செல்வன் தனது பரப்புரையை மேற்கொண்டார்.
பரப்புரையின்போது மகளிர் உரிமைத்தொகை குறித்து தங்க தமிழ்ச்செல்வன் பேசுகையில், கிராமங்களில் பெரும்பாலோனோருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என திமுக கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் கேள்வி எழுப்பியதால், கோபப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், திமுக கட்சி வேட்டியை உடுத்திக்கொண்டு நீங்க இப்படி பண்ணலாமா? எனக் கூறியதோடு உச்சி வெயில் மண்டையை பொளக்குது, தொண்டை வலிக்குது பேச்சைக் கேளு எனக்கூறி கடிந்து கொண்டார். தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் தற்பொழுது தமிழக அரசு வழங்கும் அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படும் என கூறி தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பரப்புரையை மேற்கொண்டார். இதனால் சற்று பரபரப்பு நிலவியது.