Sriperumbudur Lok Sabha Constituency: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024:

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, செலுத்தி வருகிறது என்பதை தொடர்ந்து அலசி வருகிறோம்.  அந்த வகையில் மாநிலத்தின் ஐந்தாவது தொகுதியான, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாற்றை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உருவான வரலாறு:

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி (Sriperumbudur Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளில் 5வது தொகுதி ஆகும். இத்தொகுதி, தமிழ்நாட்டின் மிகப்பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.  2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.

மறுசீரமைப்பிற்குப் பின்னர், ஸ்ரீபெரும்பதூர் சட்டமன்ற தொகுதியை தவிர, மற்ற ஐந்துமே புதிய சட்டமன்ற தொகுதிகள் தான் இடம்பெற்றுள்ளன. அதன்படி,  மதுரவாயல், அம்பத்தூர்,  ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர்,  பல்லாவரம் மற்றும் தாம்பரம் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளனர். முன்பு தனித் தொகுதியாக இருந்த ஸ்ரீபெரும்புதூர், தற்போது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி எப்படி?

தமிழ்நாட்டில் உள்ள 32 பொது தொகுதிகளில் ஸ்ரீபெரும்புதூரும் ஒன்று. பல்லவர்கள் ஆண்ட பகுதி என்ற சிறப்பை தன்னகத்தே கொண்டுள்ள இந்த தொகுதியில் தான், தமிழகத்தில் அதிக அளவில் பன்னாட்டுத் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள தொகுதியாகவும் உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பொருளாதார மண்டலம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மீனம்பாக்கம் விமான நிலையம், மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் என பல முக்கியமான தொழில் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. 

ஆட்டோ மொபைல் தொழில்கள் இங்கு பிரதானம். உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு, குறு நிறுவனங்களும் அதிகளவில் இருக்கின்றன. சென்னை புறநகரில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் தொகுதியாக உள்ளது. பட்டியலின சமூகத்தினர் வன்னிய சமூக மக்கள் ஏறத்தாழ சரிபாதி எண்ணிக்கையில் இருக்கின்றனர். ரெட்டியார், யாதவ சமூக மக்களும் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் பிரச்னை என்ன?

இங்குள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் வாகனங்கள், பொருட்களைத் துறைமுகத்துக்குக் கொண்டு செல்ல வசதியாக சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் இன்னும் நிறைவடையவில்லை.  சென்னை புறநகர் பகுதிகளைக் கொண்டுள்ள இந்தத் தொகுதியில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. எனவே, இந்தத் தொகுதியை மையப்படுத்தி பன்னோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டுமென்பது நீண்ட காலக் கோரிக்கையாக இன்னும் தொடர்கிறது. அடையாறு கால்வாய் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தொழில் நகரமான ஸ்ரீபெரும்புதூர் பகுதியை இணைக்கும் வகையில் ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்ககளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரலாறு:

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இதுவரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் திமுக ஒன்பது முறை வெற்றி பெற்றுள்ளது. இதனால், இந்தத் தொகுதி திமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. அதிமுகவும் காங்கிரஸும் தலா மூன்று முறை இந்தத் தொகுதியைக் கைப்பற்றியிருக்கின்றன. 

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1967 சிவசங்கரன் திமுக
1971 லட்சுமணன் திமுக
1977 சீராளன் ஜெகன்னாதன் அதிமுக
1980 நாகரத்தினம் திமுக
1984 மரகதம் சந்திரசேகர் அதிமுக
1989 மரகதம் சந்திரசேகர் அதிமுக
1991 மரகதம் சந்திரசேகர் அதிமுக
1996 நாகரத்தினம் திமுக
1998 வேணுகோபால் அதிமுக
1999 கிருட்டிணசாமி திமுக
2004 கிருட்டிணசாமி திமுக
2009 டி.ஆர். பாலு திமுக
2014 ராமச்சந்திரன் அதிமுக
2019 டி.ஆர். பாலு திமுக

வாக்காளர்கள் விவரம் (2024):

ஆண் வாக்காளர்கள் - 11,69,344

பெண் வாக்காளர்கள் - 11,88,754 

மூன்றாம் பாலினத்தவர் - 428

மொத்த வாக்காளர்கள் - 23,58,526

சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?

மதுரவாயல் - கணபதி (திமுக)

அம்பத்தூர் - ஜோசப் சாமுவேல் (திமுக)

ஆலந்தூர் - தஅ. மோ. அன்பரசன் (திமுக)

ஸ்ரீபெரும்புதூர் - செல்வப் பெருந்தகை ( காங்கிரஸ் ) 

பல்லாவரம் - கருணாநிதி (திமுக)

தாம்பரம் - எஸ்.ஆர். ராஜா (திமுக)