தமிழ்நாட்டின் வரிப்பணத்தை எடுத்தவர் மோடி, நல்ல திட்டங்களை கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின் என பாலக்கோடு பிரச்சாரத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை பேசினார்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து, பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, வேன் பிரச்சாரம் செய்தார்.
இந்த பிரச்சாரத்தில் பேசிய கு.செல்வப்பெருந்தகை, “தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி, அதற்கு துணை போனவர் எடப்பாடி. எடுப்பவர் மோடி, கொடுப்பவர் ஸ்டாலின். மக்களின் வரிப்பணத்தை எடுப்பவர் மோடி. மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எடுப்பவருக்கும் கொடுப்பவருக்குமான தேர்தல் நடைபெறுகிறது.
எங்கள் தலைவர் ராகுல் காந்தி 5 நீதிபோதனைகளை அறிவித்திருக்கிறார். இதில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். வேலை வாய்ப்பில்லாத பட்டதாரிகள், பாலிடெக்னிக் படித்தவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 இலட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை கொண்டு வந்தார். ஆனால் அதை மோடி அரசு இரண்டு சட்டங்களாக சுருக்கிவிட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் வேட்பாளராக, திருச்சி வந்த மோடி, நான் வெற்றி பெற்றால், ஆறு மாதத்தில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வங்கிக்கணக்கில் ரூ.15 இலட்சம் போடப்படும் என சொன்னார். இன்று வரை வரவில்லை. ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறைக்கப்படும் என சொன்னார். கேஸ் சிலிண்டர் விலை 420 ரூபாய் இருந்தது. அதனை குறைப்போம் என்று சொன்னார். ஆனால் இன்று 1000-க்கும் மேல் விலை உயர்ந்து விண்ணை முட்டும் அளவிற்கு ஏற்றம் கண்டுள்ளது. நீங்கள் எதை சொன்னீர்கள், எதை செய்திருக்கிறீர்கள். சொன்ன வாக்குறுதிகளில், தமிழ்நாட்டுக்கு எதை செய்தீர்கள். பொய் பேசுபவர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் மோடி மாதிரி பொய் பேசுபவர்களை இதுவரை பார்த்ததில்லை.
தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. அதற்கு 37 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டோம். ஆனால் ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. இந்த பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டி இந்த இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற தில் இருந்து, எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றயுள்ளது. எனவே திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.