நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், நாட்டில் உள்ள 88 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.


இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு:


அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக இன்றும், கேரளாவில் ஒரே கட்டமாக 20 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் காலை முதலே தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.


மேற்கு வங்க ஆளுநர், கேரள முதலமைச்சர், மத்திய நிதியமைச்சர்:


மேற்கு வங்கத்தின் ஆளுநரான சி.வி.ஆனந்த போஸ் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். அவர் இன்று திருவனந்தபுரத்தில் தனது வாக்கைச் செலுத்தினார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்ணூரில் தனது வாக்கைச் செலுத்தினார். மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தன்னுடைய தொகுதியான பெங்களூரில் இன்று நேரில் சென்று வாக்களித்தார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சசிதரூர் கேரளாவில் அவர் போட்டியிடும் அவரது சொந்த தொகுதியான திருவனந்தபுரத்தில் வாக்களித்தார்.


பிரகாஷ் ராஜ், சுரேஷ் கோபி:


மலையாள திரையுலகின் பிரபல நடிகர் சுரேஷ் கோபி. பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் அவர் திருச்சூரில் இன்று வாக்குச் செலுத்தினார். பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகரான பிரகாஷ்ராஜ் கர்நாடகாவைச் சேர்ந்தவர். பெங்களூர் மத்திய தொகுதியைச் சேர்ந்த அவர், காலையிலே அவர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். அதேபோல, மத்திய அமைச்சர் மற்றும் பெங்களூர் வடக்குத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளரான ஷோபா கரண்ட்லஜே பெங்களூர் வடக்குத் தொகுதியில் காலையிலே வாக்களித்தார்.


அசோக் கெலாட், வசுந்தர ராஜே:


ராஜஸ்தானின் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஜோத்பூரில் வாக்களித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் காலையிலே சென்று ஓட்டுப்போட்டார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்கலா டார்ஜிலிங்கில் வாக்கு செலுத்தினார். முன்னாள் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தர ராஜே ஜலாவர் தொகுதியில் இன்று வாக்குச் செலுத்தினார்.


மத்திய அமைச்சரும், பா.ஜ.க. வேட்பாளருமான கஜேந்திர சிங் ஷெகாவத் ஜோத்பூரில் காலையிலே சென்று வாக்கு செலுத்தினார். இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவியும், எம்.பி.யுமான சுதா மூர்த்தி பெங்களூரில் இன்று வாக்களித்தார்.