Oru Nodi Movie Review in Tamil: மணிவர்மன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஒரு நொடி” படம் இன்று (ஏப்ரல் 26) தியேட்டரில் வெளியாகியுள்ளது. மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லேம்ப் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் தமன் குமார், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, ஸ்ரீரஞ்சனி, கருப்பு நம்பியார், தீபா என பலரும் நடித்துள்ளனர். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் நிறைந்த இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை மிக அதிகம் கவர்ந்த நிலையில், “ஒரு நொடி” படத்தின் விமர்சனத்தை காணலாம்.


படத்தின் கதை 


ஒரு நொடியில் நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் அல்லது நாம் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையே புரட்டிப் போடும் என்ற அடிப்படை தத்துவத்தை கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.


மகளின் திருமணத்தை விமரிசையாக நடத்துவதற்காக கடன் வாங்கி அதற்கு பதிலாக வேல ராமமூர்த்தியிடம் தன்னுடைய நிலத்தை அடமானம் வைக்கிறார் எம்.எஸ். பாஸ்கர். குறித்த காலத்திற்குள் பணத்தை தயார் செய்து அவர் திரும்ப கொடுக்கப் போகும் நேரத்தில் காணாமல் போகிறார். இதுதொடர்பாக எம்.எஸ். பாஸ்கர் மனைவி ஸ்ரீரஞ்சனி காவல்துறையில் புகார் அளிக்கிறார். இந்த வழக்கை இன்ஸ்பெக்டரான தமன்குமார் விசாரிக்கும் நிலையில், இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.


இந்த இரண்டு சம்பவங்களிலும் தமன்குமார் உண்மையை கண்டறியும் முயற்சியில் இறங்க, அடுத்தடுத்து எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கிறது. உண்மையில் இரண்டு சம்பவங்களிலும் நடந்தது என்ன?  என்பதை தொடக்கம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸ் திரில்லராக சொல்ல முயன்று வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் மணிவர்மன்.



நடிப்பு எப்படி? 


படம் முழுக்க தமன் குமாரின் போலீஸ் விசாரணையில் பயணிக்கும் நிலையில் அந்த கேரக்டருக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரின் குரல் நடிகர் அர்ஜூனை நியாகப்படுத்துவதோடு, மேனரிசங்கள் பல ஹீரோக்களின் போலீஸ் கேரக்டரை நினைவூட்டுகிறது. மேலும் வேல ராமமூர்த்தி, பழ. கருப்பையா, தீபா ஷங்கர், எம் எஸ் பாஸ்கர், டீக்கடைக்காரர், சலூன் கடைக்காரராக நடித்தவர்கள் என அத்தனை கேரக்டர்களும் கச்சிதமான நடிப்பை வழங்கி உள்ளார்கள். 


தியேட்டரில் பார்க்கலாமா?


ஒரு நொடி படம் முழுக்க முழுக்க தியேட்டரில் ரசிகர்களை சீட்டை விட்டு எழ விடக்கூடாது என்ற எண்ணத்தில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆக எடுக்கப்பட்டுள்ளது. முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை குடும்பத்துடன் தியேட்டரில் தாராளமாக பார்க்கலாம். அடுத்தடுத்து ட்விஸ்டுகள், சரியாக இடத்தில் ட்விஸ்ட்களை ஒன்றிணைப்பது என படம் ரசிக்க வைக்கிறது. குற்றம் செய்தவர்கள் யார் தான் என்ற சந்தேகத்தை படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களிம் மீதும் கொண்டு சேர்த்து “ஒரு நிமிடம்” ரசிகர்களையே யோசிக்க வைத்து விடுகிறது. 


படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை நகர்வு என அனைத்தும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. பாடல்கள் பெரிய அளவில் கதையை பாதிக்காத வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் ஒரு பிளாஷ்பேக் கதையை சொன்னாலும் அதை சரியாக மெயின் கதையோடு இணைத்துள்ளார்கள். கிளைமேக்ஸ் காட்சி எதிர்பாராத ஒன்று தான் என்றாலும், சற்று பயமாகவே இருக்கிறது. சில நிமிட காட்சிகள் பொறுமையை சோதித்தாலும் ஒரு நொடி படம் தியேட்டரில் பார்க்க ஒர்த் ஆன படம் தான்..!