தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்து அருண் கோயல் ராஜினாமா செய்ததாலும், அனூப் சந்திர பாண்டே ஓய்வு பெற்றதாலும் 2 பதவிகள் காலியாக உள்ளன. இந்த இரண்டு பதவிகளுக்கான நியமனத்திற்கான பெயர்களை இன்று (மார்ச் 14) தேர்வுக் குழுவுக்கு தேடல் குழு அனுப்பியது.  


அதன்படி, இந்த பதவிக்கு அமலாக்க இயக்குனரகத்தின் முன்னாள் தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ரா மற்றும் என்.ஐ.ஏ தலைவர் பதவியில் இருந்து விலகும் தினகர் குப்தா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இது தவிர, சிபிடிடியின் முன்னாள் தலைவர் பிசி மோடி, ஜேபி மகாபத்ரா, ராதா எஸ் சவுகான், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஞானேஷ்வர்குமார் மற்றும் பல்வேந்தர் சாந்து உள்ளிட்ட முக்கிய நபர்களின் பெயர்களையும் தேடல் குழு தேர்வு குழுவிற்கு பரிந்துரை செய்தது. 


இந்தநிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஞானேஷ்வர்குமார் புதிய தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உத்தரகாண்ட் கேடரின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சுக்பீர் சிங் சந்து, இன்னொரு தேர்தல் அதிகாரியாக தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்


இரு பதவிகளுக்கான நியமனம் தொடர்பாக இன்று தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்திய பிரதமர் மோடி தலைமை தாங்கினார். மேலும், இந்த கூட்டத்தில் சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 


தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு தடை: 


இதனிடையே, தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரி ஏடிஆர் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கானது நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இந்த மனுவை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பின்படி தேர்தல் ஆணைய உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான வழிமுறைகளை ஏடிஆர் தனது மனுவில் கோரியுள்ளது.


திடீரென பதவி விலகிய அருண் கோயல்: 


மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் கமிஷனர் அருண் கோயல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் அனூப் பாண்டே ஓய்வு பெற்றார். அருண் கோயல் ராஜினாமா செய்த பிறகு, 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில் தற்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட அருண் கோயலின் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும், இந்த மனு கடந்த 2023 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்சால் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. 


யார் இந்த அருண கோயல்..? 


அருண் கோயல்,  இந்திய தேர்தல் ஆணையராக கடந்த 2022ம் நவம்பர் மாதம் நியமனம் செய்யப்பட்டார். இந்திய அரசின் கனரகத் தொழில்கள் அமைச்சகத்தின் செயலராக இருந்த இவர், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ஓய்வு பெற இருந்தார். ஆனால், தனிப்பட்ட காரணத்திற்காக 18 நவம்பர் 2022 அன்றே விருப்ப ஓய்வு பெற்றார். விருப்ப ஓய்வு பெற்ற மூன்றே நாளில் அருண் கோயலுக்கு தேர்தல் ஆணையாளராக பதவி வழங்கப்பட்டது. இது மிகப்பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளானது.


இந்தநிலையில், கடந்த மார்ச் 9 ம் தேதி தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து விலகுவதாக அருண் கோயல் கடிதம் எழுத, குடியரசுத் தலைவரால் அக்கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இவர் பதவி விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.