ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளியான 'ஷைத்தான்' படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது.
ஜோதிகா
தமிழ் சினிமாவிம் பலர் மனம் கவர்ந்த நடிகையாக இருந்தவர் ஜோதிகா. திருமணத்திற்குப் பின் படங்களில் நடிப்பதை நிறுத்தி தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பிற்கு திரும்பினார். பெரும் எதிர்பார்ப்புகளுடம் வெளியான 36 வயதினிலே படம் அவருக்கு ஒரு நல்ல கம் பேக் ஆக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் , ராட்சசி, மகளிர் மட்டும் , நாச்சியார் என அவர் நடித்தப் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்தன. பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை ஜோதிகா தேர்வு செய்து நடித்திருந்தாலும் இந்தப் படங்கள் மக்களை அவ்வளவாக கவரவில்லை என்பதே உண்மை. நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது ஜோதிகா அடுத்தடுத்த இரண்டு வெற்றிகளை பதிவு செய்திருக்கிறார். ஆனால் இந்த இரண்டு படங்களும் தமிழில் வெளியானவை இல்லை என்பது கொஞ்சம் வருத்தத்திற்குரிய விஷயம் தான்.
காதல் தி கோர்
கடந்த ஆண்டு இறுதியில் மம்மூட்டி நடித்து ஜியோ பேபி இயக்கத்தில் வெளியான படம் காதல் தி கோர். தனது கணவனின் பாலின அடையாளத்திற்காக பலவித சவால்களை எதிர்கொண்டு போராடும் ஒரு பெண் கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் உருவாக்கியிருந்தார் இயக்குநர் ஜியோ பேபி. ஜோதிகா இந்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே நடித்திருந்தார். உணர்ச்சிவசமான கதைகளில் எப்போது ஜோதிகா ஒரு படி மேலே தனது நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அப்படியான ஒரு கதைக்களமான இந்தப் படத்தில் அவர் பார்வையாளர்களை வியக்க வைத்தார்.
ஷைத்தான்
ஜோதிகா, மாதவன், அஜய் தேவ்கன் நடித்து சமீபத்தில் இந்தியில் வெளியான படம் ஷைத்தான். ஹாரர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இப்படத்தில் ஜோதிகாவின் நடிப்பு குறிப்பிட்டு சொல்லும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. ஷைத்தான் படம் இதுவரை ஐந்து நாட்களில் ரூ.69 கோடி வசூல் செய்துள்ளது.
டப்பா கார்டெல்
இரண்டு படங்கல் வெளியாகி வெற்றிபெற்றுள்ள நிலையில் ஜோதிகா நடிப்பில் அடுத்தபடியாக வெளியாக இருப்பது ஒரு வெப் சீரிஸ். நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் வெப் சீரிஸ் ‘டப்பா கார்டெல்’ . ஷபானா அஸ்மி, நிமிஷா சஜயன், அஞ்சலி ஆனந்த், ஜோதிகா உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ள த்ரில்லர் தொடர். போதைப் பொருட்களை லஞ்ச் பாக்ஸில் வைத்து கடத்தும் பெண்களை மையப்படுத்திய கதையாக இந்த தொடர் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. விரைவில் இந்த தொடர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது.