மக்களவைத் தேர்தல் நேற்று தமிழ்நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றாலும், சில இடங்களில் வாக்குப்பதிவில் சில சில சலப்புகள் ஏற்பட்டது.


வாக்களிக்க வந்த மூதாட்டி:


இந்த நிலையில், சர்கார் பட பாணியில் பெண் ஒருவர் வாக்கு செலுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமேஸ்வரம் வேர்க்கோடு பகுதியில் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் எண் 312  வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த பகுதியில் உள்ள எம்.ஆர்.டி நகர் பகுதியில் வசிப்பவர் 65 வயதான லட்சுமி. ஒவ்வொரு தேர்தலிலும் தவறாது வாக்கு செலுத்தி வரும் லட்சுமி, வழக்கம்போல தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக நேற்று வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார்.


அப்போது, இவர் தனது வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளை காட்டியுள்ளார். ஆனால், வாக்குச்சாவடியில் இருந்த தேர்தல் அதிகாரிகள் லட்சுமி ஏற்கனவே வாக்களித்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால், அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், தன்னுடைய வாக்கை மற்றொருவர் எவ்வாறு செலுத்த முடியும் என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.


சர்கார் பட பாணியில் வாக்களிப்பு:


பின்னர், 49 ஓ முறையை பயன்படுத்தி வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தார். 'தமிழக வெற்றிக் கழகம்' அரசியல் கட்சித் தலைவரும், நடிகருமான விஜய் தனது சர்கார் படத்தில் இதேபோன்று 49 ஓ என்ற முறையை பயன்படுத்தி வாக்களிக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். அதேபோல, மூதாட்டி ஒருவர் 49 ஓ என்ற முறையில் மக்களவைத் தேர்தலில் வாக்களித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் நேற்று சுமூகமாக நடைபெற்றது. நேற்று நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பதிவான இறுதி வாக்கு சதவீத நிலவரம் இன்று காலை 11 மணியளவில் வெளியாக உள்ளது.  


வாக்குப்பதிவு நிறைவு:


தமிழ்நாடு மட்டுமின்றி 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் பல இடங்களில் மக்கள் தேர்தலை புறக்கணிப்பாக கூறியிருந்தனர். அதுபோன்ற இடங்களில் அதிகாரிகள் அந்த பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி வாக்களிக்க வைத்தனர். பல வாக்குச்சாவடிகளில் தள்ளாத வயதிலும் பல முதியவர்கள் தங்களது வாக்குகளை நேரில் வந்து வாக்களித்தனர்.


அதேசமயம், தமிழ்நாட்டில் பல இடங்களில் வாக்காளர்கள் தங்களது பெயர்கள் விடுபட்டிருப்பதாக கூறி, வாக்களிக்க இயலாமல் திரும்பிச் சென்றனர். பிரபல நடிகர் சூரியும் தனது வாக்கைச் செலுத்த இயலாமல் திரும்பிச் சென்ற சம்பவமும் அரங்கேறியது.


மேலும் படிக்க: Lok Sabha Election: கடந்த 4 மக்களவைத் தேர்தல்கள்! எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? ஓர் அலசல்..


மேலும் படிக்க: ரூ.1.70 லட்சம் செலவு; 26 மணி நேர பயணம் - கடல் கடந்து வந்து வாக்கு செலுத்திய மருத்துவர்