மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது. தனது ஜனநாயக கடமையான ஓட்டை செலுத்த வேண்டும் என்று முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து வாக்காளர்களும் ஆர்வமாக தங்களது வாக்குகளை செலுத்தினர்.
கடலூர் செம்மண்டலம் என்ற ஊரை சேர்ந்தவர் வினோத் (வயது 46). இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை தனது சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பியுள்ளார். இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊரான கடலூருக்கு நேற்று இரவு வந்தார்.
வாக்குப்பதிவு நாளான இன்று கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கை பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
பின்னர் இதுகுறித்து டாக்டர் வினோத் கூறுகையில், “வெளிநாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்” என்றார்.
26 மணி நேரம் பயணம் செய்து ஒரு லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தனது வாக்கினை செலுத்த வந்த மருத்துவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.