Rahul Gandhi Marriage: காந்தி குடும்பத்தின் கோட்டையாக விளங்கும் ரேபரேலி மக்களவை தொகுதியில் யார் நிற்க வேண்டும் என்பது குறித்து உயரதிகாரிகள் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இங்கு எம்.பி.யாக இருந்த சோனியா காந்தி, இம்முறை நேரடி அரசியலில் இருந்து விலகியுள்ளார். ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிருந்து, ரேபரேலி வேட்பாளர் மீதான பரபரப்பு தொடர்ந்தது. கடைசி நிமிடம் வரை சஸ்பென்ஸாக இருந்த காங்கிரஸ், வேட்புமனு தாக்கல் முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ராகுல் காந்தியின் பெயரை அறிவித்தது. பின்னர் அமேதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கே.எல்.சர்மாவை நிறுத்தியது.
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் வேட்பாளருமான ராகுல் காந்தி பேசினார். அப்போது பேசிய அவர், “வருகின்ற ஜூன் 4ஆம் தேதி, காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால், இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணின் பெயர் தேர்வு செய்யப்பட்டு, அந்த பெண்ணின் வங்கிக் கணக்கில், ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 லட்சம் வரவு வைக்கப்படும்.” என்று தெரிவித்தார்.
அப்போது ரேபரேலி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் இருந்து ஒரு பெண், “நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்..?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த ராகுல் காந்தி, “விரைவில் திருமணம் செய்துகொள்கிறேன்” என்று தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரேபரேலியில் நடந்த பிரசாரத்தின்போது ராகுல் காந்தியுடன் அவர்களது அக்காவான பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார்.
அதன்பின், இருவரும் வீடு வீடாகச் சென்று காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து தனது பாட்டி இந்திரா காந்தியை நினைவுக்கூர்ந்த ராகுல் காந்தி, “இரண்டு வருஷத்துக்கு முன்னாடி, அம்மாவோட உட்கார்ந்து பேசிட்டு இருந்தேன். அப்போதுதான் என் பாட்டி இந்திரா காந்தியை நினைச்சுக்கிட்டேன். எங்க பாட்டி என் அம்மாவுக்கு அம்மா மாதிரிதான். ரேபரேலி எங்க குடும்பத்தின் பாரம்பரிய தொகுதி. அதனால் இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்தேன்” என்றார்.
அமேதி தொகுதி எப்படி..?
ரேபரேலி தொகுதியை தொடர்ந்து அமேதி தொகுதியும் காங்கிரஸின் பாரம்பரிய தொகுதிதான். அமேதி தொகுதியில் ராகுல் காந்தி 2004-19 வரை இங்கு எம்.பி.யாக வெற்றி பெற்றார். 2019 மக்களவைத் தேர்தலில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்த, ராகுல் காந்தி தற்போது ரேபரேலியில் போட்டியிடுகிறார். முன்னதாக, 1999ல் சோனியா காந்தியும் அமேதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ரேபரேலியில் மூன்று முறை வெற்றி பெற்றார். அவரது கணவர் ஃபெரோஸ் காந்தி 1952ல் ஒரு முறையும், 1957ல் இரண்டாவது முறையும் எம்.பி.யாக வெற்றி பெற்றார்.