உத்தரபிரதேசம் ரேபரேலி  தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களாக யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி இருந்துகொண்டே இருந்தது. இந்தநிலையில், இந்த கேள்விக்கு முடிவு கொண்டு வரும் நிலையில், ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியும், அமேதி தொகுதியில் கிஷோரி லாலும் போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 






இதையடுத்து, பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானியை எதிர்த்து கிஷோரி லால் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். 


முன்னதாக, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2004 முதல் தொடர்ந்து மூன்று முறை அமேதி தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2019 ம் ஆண்டு அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியுற்றார். இந்த நிலையில், தற்போதைய மக்களவை தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி. 


தாய் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி:


தனது சொந்த தொகுதியான அமேதி தொகுதிக்கு பதில் தாயின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி. அமேதி தொகுதியில் கடந்த 2004ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி 2019ல் தோல்வியடைந்தார். ரேபரேலியில் தொடர்ந்து வெற்றிபெற்ற சோனியா காந்தி இந்த முறை மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வானார். தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சோனியா காந்தி அறிவித்ததால் ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். 


உத்தரபிரதேச மாநிலம் பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல்களில் அமேதி தொகுதியில் பாஜக சார்பாக ஸ்மிருதி இரானியும், காங்கிரஸ் சார்பாக ராகுல்காந்தியும் களத்தில் போட்டி போட்டனர். 2004 முதல் 2019 வரை அமேதி தொகுதி ராகுல்காந்தி வசம் இருந்தது. ஆனால் 2019 தேர்தலில் ராகுல்காந்தியை வீழ்த்தி எம்.பி ஆனார் ஸ்மிருதி இரானி. அமேதி தொகுதியில் மொத்தமாக காங்கிரஸ் கட்சி இதுவரை 16 முறை வெற்றி பெற்றுள்ளது. 


காந்தி-நேரு குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகள்:


என்னதான் உத்தரபிரதேசம் பாஜகவின் கோட்டையாக இருந்தாலும், அமேதி மற்றும் ரேபரேலி காந்தி-நேரு குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகளாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிட மறுத்ததையடுத்து, அமேதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கிஷோரி லால் சர்மா யார் என்ற விவாதம் தொடங்கியது. 


கிஷோரி லால் சர்மா யார்? 


அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த கே.எல்.சர்மா என்ற கிஷோரி லால் சர்மா, ரேபரேலியில் சோனியா காந்திக்கு உதவியாக நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறார். 


ஏறக்குறைய 30 ஆண்டுகளாக அமேதி மற்றும் ரேபரேலியில் அமைப்புப் பணிகளைச் செய்து வரும் கே.எல்.சர்மா, இந்த இரண்டு மாவட்டங்களின் ஒவ்வொரு தெருவையும் நன்கு அறிவார் என்று கூறப்படுகிறது. அதேபோல், ஒவ்வொரு காங்கிரசார் அவரையும் அறிவார்கள். ராஜீவ் காந்தி காலத்தில், உ.பி., அரசின் பணிகளை மேம்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். அன்றிலிருந்து அவர் அப்படியே அந்த தொகுதியிலேயே இருந்து விட்டார். 


கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக ரேபரேலியில் சோனியா காந்தியும், 2004ல் ராகுல் காந்தி அமேதியில் முதல்முறையாக வேட்புமனு தாக்கல் செய்தபோது துணையாக நின்ற கிஷோரி லால் சர்மா, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே அமேதியில் ராகுலுக்குப் பதிலாக தேர்தலில் போட்டியிடப் போகிறார்.