காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரு வாகனங்களையும் கொண்டு வந்து 18 கிலோ தங்க நகைகளுக்கும் 100 கிலோ வெள்ளி பொருட்கள் உரிய ஆவணங்கள் உள்ளதா என அதிகாரிகள் விசாரணை. உரிய ஆவணங்களைக் காட்டி பெற்றுச்செல்லும் வரை கருவூலத்தில் ஒப்படைப்பு. 

 


பாராளுமன்ற பொது தேர்தல்–2024 


இந்தியாவின் 18 -வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 - ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும். ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. ஏப்ரல் 19 நடைபெறும் முதல் கட்ட வாக்குப் பதிவில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி, பஞ்சாப், குஜராத் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு தேர்தல் நடத்தை விதிகள் கடைபிடிக்கப்பட உள்ளது. 


தேர்தல் பறக்கும் படை


இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை நிறுத்தி பணத்தையும் பரிசு பொருட்களையும் எடுத்து செல்கிறார்களா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஜி.ஆர்.டி நகைக்கடையில் இருந்து அரக்கோணம், செங்கல்பட்டு, ஓஎம்ஆர் பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு தங்க நகைகளை ஏற்றிச் சென்ற தனியார் வாகனத்தை காஞ்சிபுரம் அருகே வையாவூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.



பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள்


வாகன சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி நகைகள் கொண்டு செல்லப்படுவதை கண்டறிந்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து உரிய ஆவணங்கள் உள்ளதா என மாவட்ட வருவாய் துறை அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 



இதே போல வாலாஜாபாத் பகுதியிலும் டாடா,ஜிஆர்டி உள்ளிட்ட பல்வேறு நகைக் கடை நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை சப்ளை செய்ய கொண்டு சென்ற வாகனத்தையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

100 கிலோ வெள்ளி நகை


மேலும் வையாவூரில் பறிமுதல் செய்த வாகனத்தில் 10 கிலோ தங்க நகைகளும் 58 கிலோ வெள்ளி நகைகளும், வாலாஜாபாத்தில் பறிமுதல் செய்த வாகனத்தில் 8 கிலோ தங்க நகைகளும் 42 கிலோ வெள்ளி நகைகளும் என 18 கிலோ தங்க நகைகளும் 100 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து, உரிய ஆவணங்களை காட்டி பெற்றுச்செல்லும் வரை கருவூலத்தில் ஒப்படைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 



இரு வேறு இடங்களில் தங்க நகைகளை கொண்டு சென்ற வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருவதால் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.