சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு தான் யார் என்று இந்த உலகிற்கு தெரியாதபோது தனக்கு ஆதரவாக நின்றவர் எம்.எஸ்.தோனி என இந்திய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நேற்று 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதற்கும், 500 விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கும் அஸ்வினுக்கு பாராட்டு விழா நடத்தியது. இந்த விழாவின்போது, அஸ்வின் தனது வாழ்க்கையை மாற்றிய 2011 ஐபிஎல் இறுதிப் போட்டியை நினைவு கூர்ந்தார். அப்போது பேசிய அவர், “ எம்.எஸ்.தோனி புதிய பந்தில் கிறிஸ் கெயிலுக்கு எதிராக பந்து வீச எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அப்போது நான் நான்காவது பந்தில் விக்கெட்டை வீழ்த்தினேன். இன்னும் பலரும் இதைப் பற்றி பேசுவதற்கு தோனிதான் காரணம். தனக்கு ஆதரவாக நின்று வாய்ப்புகளை வழங்கிய மகேந்திர சிங் தோனிக்கு எனது வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 2013ம் ஆண்டு இந்தியா விளையாடிய ஒரு தொடரின் போது என்னை அணியிலிருந்து ட்ராப் செய்யும் முடிவில் தேர்வு குழுவினர் இருந்தார்கள். அந்த நேரத்தில் தோனிதான் அவர் கடந்த சீரிஸில் சிறப்பாக விளையாடினார் எனக் கூறி எனக்காக இயன்றளவுக்கு சப்போர்ட் செய்து அணியில் எடுத்தார்.
2008ம் ஆண்டு நான் சிஎஸ்கே டிரஸ்ஸிங் ரூமில் மேத்யூ ஹெய்டன் மற்றும் எம்.எஸ். தோனியை சந்தித்தேன். அப்போது, மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு அங்கமாக இருந்தேன். ஆனால், முத்தையா முரளிதரனால் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பிறகு நான் பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடினேன்.
இந்த அற்புதமான விளையாட்டு எனக்கு வழங்கியதற்கு உண்மையிலேயே பணிவு மற்றும் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். யாருக்கு நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் எப்படி உணர்கிறேன் என்பதை வெளிப்படுத்த எனக்கு வார்த்தை இல்லை. நான் இங்கு இருப்பதற்கு உண்மையிலேயே தாழ்மையும், நன்றியும் உடையவனாக இருக்கிறேன். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எனக்கு மிகுந்த மரியாதை அளித்துள்ளது. அதனால், நான் எப்போது வேண்டுமானாலும் தமிழ்நாடு கிளப் கிரிக்கெட்டுக்கு தயாராக இருக்கிறேன். நாளை நான் இறந்தாலும் என் ஆன் ஆன்மா இந்த சேப்பாக்க மைதானத்தில்தான் அலையும். அந்தளவு சேப்பாக்கம் எனக்கு முக்கியமானது” என உணர்ச்சிவசமாக பேசினார்.
முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அஸ்வினின் 100வது டெஸ்ட் குறித்து பேசியபோது, “அஸ்வினின் 100 வது டெஸ்ட்டின் நானும் விளையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய ஏற்ற இறக்கங்களை கடந்து ரவிசந்திரன் அஸ்வின் இந்த நிலையை எட்டியிருக்கிறார். அஸ்வின் போன்ற வீரர் ஒரு கேப்டனுக்கு கிடைப்பது ஆகச்சிறந்த பரிசு.” என தெரிவித்தார்.
அஸ்வினின் ஐபிஎல் வாழ்க்கை:
ரவிசந்திரன்அஸ்வின் வருகின்ற ஐபிஎல் 2024 சீசன் 17ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். அஸ்வின் தனது ஐபிஎல் வாழ்க்கையில் இதுவரை 197 போட்டிகளில் விளையாடி 171 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் கடந்த 2009 ஆண்டு ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமானார். இவர் தனது முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார்.