Watch Video: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோனிக்கு முன்னதாக, பேட்டிங் செய்ய களமிறங்குவதை போன்று ஜடேஜா நாடகமாடி ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்.


சென்னை அணி ரசிகர்கள்:


ஐபிஎல் எனும் கிரிக்கெட் திருவிழா தொடங்கி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணி ரசிகர்களும் தங்கள் அணி வெற்றி பெறுவதை நேரில் காண வேண்டும் என மைதானங்களில், குவிகின்றனர். அதேநேரம், சென்னை அணி ரசிகர்கள் மட்டும், தங்களால் ”தல” என அன்போடு அழைக்கப்படும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் மைதானங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.


கொல்கத்தா உடன் மோதல்:


அந்த வகையில் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின, இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 137 ரன்களை மட்டுமே சேர்த்தது. அபாரமாக பந்துவிசிய ஜடேஜா, 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.






ரசிகர்களை ஏமாற்றி நாடகமாடிய ஜடேஜா:


இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியில் கேப்டன் கெய்க்வாட் அரைசதம் விளாசினார். அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 18 பந்துகளில் 28 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதையடுத்து தோனி களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டதும், ஒட்டுமொத்த ரசிகர்களும் “தல, தோனி” என முழக்கங்களை எழுப்பினர். தோனியின் பேடிங்கை காண மொத்த ரசிகர் கூட்டமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் திடீரென கையில் பேட்டுடன், ஜடேஜா பெவிலியனில் இருந்து களத்தை நோக்கி நடந்தார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அங்கிருந்த சிஎஸ்கே அணி ஊழியர்களே நடப்பதை உணராமல் சற்று திகைத்து நின்றனர்.


ஆனால், உடனடியாக ஜடேஜா மீண்டும் பெவிலியனுக்குள் திருபினார். பின்பு தான், ரசிகர்களை ஏமாற்ற ஜடேஜா நாடகமாடினார் என்பதை அனைவருமே உணர்ந்தனர். இதையடுத்து தோனி களத்திற்கு வர ஒட்டுமொத்த மைதானமே ஆர்ப்பரித்தது. அவரது பெயரை முழங்கி ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். 


கசப்பை மறந்த ஜடேஜா:


கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என பரவலாக பேசப்பட்டது. இதனால், கடைசியாக ஒருமுறை தோனியின் பேட்டிஙகை பார்த்து விட வேண்டும் என ரசிகர்கள் சாரை சாரையாக மைதானங்களுக்கு படையெடுத்தனர். அப்போது, தோனிக்கு முன்பாக ஜடேஜா களமிறங்கும்போது அவருக்கு எதிராக பலரும் முழக்கங்களை எழுப்பினர். அதோடு, ஜடேஜா விரைவில் அவுட் ஆக வேண்டும் எனவும் பலர் மைதானங்களிலேயே கூக்குரலிட்டனர். இந்த கசப்பை எல்லாம் கடந்து தான், கடந்தாண்டு இறுதிப்போட்டியில் சென்னை அணி வெல்ல ஜடேஜா முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் கடந்த ஆண்டு ரசிகர்கள் செய்த செயலுக்கு செல்லமாக பழி வாங்கும் விதமாக, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா ஒரு குட்டி நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.