நாட்டில் புதியதாக ஆட்சியை அமைக்கப்போவது யார்? என்பதை தீர்மானிக்கப்போகும் மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் சேர்த்து வரும் 19ம் தேதி ( நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.வும், 10 ஆண்டுகளாக இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணி என்ற பெயரிலும் களத்தில் இறங்குகின்றன.
ஓய்ந்தது தேர்தல் பரப்புரை:
தமிழ்நாட்டில் இந்தாண்டு பிறந்தது முதலே தேர்தல் பணிகள் சூடுபிடித்து வந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என்று பரபரப்பாக இருந்த கட்சிகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் பரப்புரையில் தீவிரமாக இறங்கின. தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், 17ம் தேதி மாலை 6 மணியுடன் அரசியல் கட்சியினர் பரப்புரையில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அனல் பறந்த தலைவர்களின் பிரச்சாரம்:
இதையடுத்து, கடந்த ஒரு மாதமாக தமிழ்நாடு முழுவதும் அனல் பறந்த அரசியல் கட்சிகளின் பரப்புரை இன்றுடன் ஓய்ந்தது. கடந்த ஒரு மாத காலமாக தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அ.தி.மு.க. கூட்டணிக்காக எடப்பாடி பழனிசாமியும், பா.ஜ.க. கூட்டணிக்காக பிரதமர் மோடியும் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொண்டனர். குறிப்பாக, பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தியதுடன் தமிழ்நாட்டிற்கு அடுத்தடுத்து வருகை தந்தார். மேலும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தியும் தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொண்டார்.இவர்கள் மட்டுமின்றி வைகோ, ராமதாஸ், திருமாவளவன், சீமான், டிடிவி தினகரன், அண்ணாமலை ஆகியோரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.
பல இடங்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வினோதமான முறையிலும் வாக்கு சேகரித்தனர். பரப்புரை ஓய்ந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி பரப்புரையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், பரப்புரை ஓய்ந்துள்ள நிலையில், பரப்புரைக்காக அரசியல் கட்சியினருக்கு ஆதரவாக வந்த தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் தொகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
தீவிர பாதுகாப்பு:
வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற இருப்பதாலும், அரசியல் கட்சியினர்களின் பரப்புரையும் நிறைவு பெற்றுள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் பணப்பட்டுவாடா நடக்கிறதா? என்றும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இன்று முதல் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்பதால், மதுவிற்பனை சட்ட விரோதமாக நடக்கிறதா? என்றும் கண்காணித்து வருகின்றனர்.
கூட்டணி விவரம்:
தமிழ்நாட்டில் நடப்பு மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க., வி.சி.க., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதிமய்யம் ஆகிய கட்சிகள் இடம்பிடித்துள்ளன.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க. இந்த தேர்தலில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. நாம் தமிழர் கட்சி வழக்கம்போல அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றனர்.