விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே முகையூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நபர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை கண்டவுடன் பணத்தை காரில் போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். காரையும் பணத்தையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். 


நாடாளுமன்ற தேர்தல் 


நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடியவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.


பணம் பட்டுவாடா


விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் அருகேயுள்ள முகையூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருவதாக தேர்தல் பறக்கும் படை ஜவகர் தலைமையிலான அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


தேர்தல் பறக்கும் படை


அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் முகையூர் பகுதியில் பல்வேறு பகுதியில் சோதனை நடத்தினர் அப்போது பொலிரோ காரில் அடையாளம் தெரியாத நபர்கள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வந்துள்ளனர்.


இரண்டு லட்சம் பணம் மற்றும் கார் பறிமுதல்


அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை கண்டவுடன் 2.25 லட்சம் ரூபாயை காரில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து பணம் பட்டுவாடா செய்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட காரும் காரில் இருந்த 2.25 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து திருக்கோவிலூர் தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கண்ணனிடம் ஒப்படைத்தனர். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.