எய்ம்ஸ் மருத்துவமனை பாஜக ஆளும் மாநிலங்களில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இங்கே ஐந்து ஆண்டுகளாகியும் கட்டப்படவில்லை, இதை கேட்டால் பழனிசாமி பதில் சொல்கிறார் என தருமபுரியில் அமைச்சர் உதயநிதி பேசினார்.
 
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது தருமபுரி தொலைபேசி நிலையம் அருகே வேட்பாளர் ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
 
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி, நமது எதிரிகள் பிரிந்து வருகிறார்கள். அதனால்  3 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்,  தருமபுரி மாவட்டத்தில், மொரப்பூர்-தருமபுரி அகல ரயில்பாதை அமைக்கப்படும். தருமபுரி-சேலம் 4 வழிச்சாலை, 6 வழிச் சாலையாக அமைக்கப்படும். காவிரி உபரிநீர்திட்டம் மூலம் ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும்.
 
தருமபுரி தொகுதியில் மணி வெற்றி பெறுவது உறுதி என்பதை, உங்கள் எழுச்சியை பார்த்து தெரிந்து கொண்டேன். மோடி தமிழ்நாட்டு மக்கள் வேட்டு வைக்கிறார். வரும் 19-ம் தேதி நடைபெறும் தேர்தலில் நாம் மோடிக்கு வேட்டு வைக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை, சுயமரியாதை என்ன என்பதை தெரிந்து கொள்வார். மோடி எப்பொழுதாவது வந்தாரா, கொரோனா காலத்தில் நிவாரணமும் கொடுத்தாரா? மோடி தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தமிழ்நாட்டிற்கு வருவார். 
 
முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். மகளிர் பேருந்து பயணம். இந்த பேருந்தை மகளிர் ஸ்டாலின் பேருந்து என சொல்கிறார்கள். பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. ஆண்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 1000 வழங்கப்படவுள்ளது. அதேப்போல் முதலமைச்சர் காலை உணவு திட்டம் செயல்படுத்துவதை, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதுதான் திராவிட மாடல் அரசு. மேலும் கனடா நாட்டிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
 
பாமக பாஜகவோடு கூட்டணி வச்சிருக்கு. வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு உதவி, மண்டபம் கட்டிக் கொடுத்துவர் திமுக தலைவராக இருந்தவர் கலைஞர். சமூக நீதி பற்றி பேசுகிறார் பெரியவர் மருத்துவர் ராமதாஸ். எல்லோரும் சமம் என்பது தான் சமூகநீதி. ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவுக்கு, பழங்குடியினர் சமூகம் என்ற காரணத்திற்கு குடியரசு தலைவர் அழைக்கப்படவில்லை. இதுதான் சமூக நீதியா?. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் ராமதாஸ், தொலைக்காட்சி பேட்டியில், பாஜக ஆட்சிக்கு பூஜ்ஜியத்திற்கு கீழ் வழங்கவுதாக சென்னார். ஆனால் இன்று கேட்டுப்பாருங்கள். 1000 மதிப்பெண் கொடுப்பார். எல்லாம் அரசியல் நாடகம். 10.5 சதவீத இடஒதுக்கீடு அதிமுக அடிமை ஆட்சியில் கடைசி நேரத்தில் கொடுத்ததால், நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இதற்கு திமுக அரசு சட்டம் போராட்ட நடத்தி, விரைவில் பெற்று தரும்.
 
மத்திய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பாஜகவும், பழனிசாமியும் செங்கல் நட்டார்கள். ஆனால் இன்று வரை வரவில்லை. அதனால் அந்த செங்கல்லை பிடிங்கிட்டு வந்துட்டேன். நட்டது ஒரே செங்கல் அதை நான் எடுத்துட்டு வந்துட்டேன். இப்பொழுது செங்கல்லை காணோம் என்று தேடுகிறார்கள். நான் மருத்துவமனை கட்டினால் மட்டுமே செங்கல்லை கொடுப்பேன் சொல்லிவிட்டேன். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்று கேட்டால், பிரதமர் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் பழனிசாமி பதில் தருகிறார். ஏனென்றால் இவர்கள் இருவரும் கள்ளக் கூட்டணி. பாஜக ஆளும் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வழங்குவதாக சொன்னார். இப்போது வழங்கப்பட்டு வருகிறது. சிலபேருக்கு வரவில்லை. விரைவில் விண்ணப்பித்தவர்களுக்கு ஆய்வு செய்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியுள்ள மகளிருக்கு, இன்னும் 6 மிதத்திற்குள் முதல்வர் வழங்குவார் என்று உறுதியளிக்கிறேன். 
 
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்படும். இந்த விலையை ஏற்றியது பாஜக. ஆனால் மகளிரை ஏமாற்றுவதற்காக, மோடி மகளிருக்கு பரிசளிப்பதாக, 800 ரூபாய் ஏற்றிவிட்டு, 100 ரூபாய் குறைக்கிறார். ஆனால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கேஸ் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி முழுவதும் ரத்து செய்யப்படும். மேலும், நாம் 1 ரூபாய் வரி கட்டினால், நமக்கு 29 பைசா கொடுக்கிறார். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் கொடுக்கிறார்கள். அதனால் தான் அவருக்கு 29 பைசா என பெயர் வைத்துள்ளேன். 
 
அதிமுக நம் உரிமை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்கள். இப்போழுது உரிமையை மீட்பதாக சொல்கிறார். இந்திய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்கிறார். நான் கேட்கிறேன் அதிமுக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? பழனிசாமியா?. திமுக ஊழல் ஆட்சி என்று மோடி சொல்கிறார். ஆனால், சிஏஜி அறிக்கையில் 7 இலட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு சரியான பாடத்தை சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.