தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக தேர்தல் நடைபெறும் சமயத்தில் மதுபானக் கடைகள் மூடப்படுவது வழக்கம். இதையடுத்து, தமிழ்நாட்டில் வரும் 17, 18 மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் 19ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


19ம் தேதி தேர்தல்:


மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது, நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 3வது அல்லது நான்காவது கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், முதற்கட்டத்திலே வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மத்திய துணை பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் மதுபான கடைகள் அடைக்கப்படுவது வழக்கம்.


மதுபான கடைகள் மூடல்:


இந்த முறை வாக்குப்பதிவு நடைபெறும் தினமான ஏப்ரல் 19ம் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மதுபான கடைகள் மூடப்பட உள்ளது. மதுபோதையில் வாக்குப்பதிவிற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக போதை ஆசாமிகள் நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுபான கடைகள் மூடப்பட உள்ளது.


வாக்குப்பதிவிற்கு 2 நாட்கள் முன்னதாகவே கடைகள் மூடப்படுவதால், அடுத்த சில தினங்களில் மதுபானங்களின் விற்பனை அதிகளவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் மதுபானங்களை அதிகளவில் வாங்கி பதுக்கி விற்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வழக்கத்தை விட அதிகளவில் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்த பின்பு வாக்கு இயந்திரங்கள் பத்திரமாக கொண்டு செல்லப்பட்டு, அருகில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டு சீலிடப்பட உள்ளன. அரசு மதுபான கடைகள் 3 நாட்கள் மூடப்பட உள்ளதால், மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பவர்களையும் தீவிரமாக கண்காணிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. 


மேலும் படிக்க:  Arcot N Veeraswami: மக்களவை தேர்தலுக்காக தபால் வாக்கு செலுத்திய திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி


மேலும் படிக்க: Lok Sabha Election 2024 : ஆட்சி அதிகாரம் முக்கியம் இல்லை மக்கள் தான் எங்களுக்கு முக்கியம் - எடப்பாடி பழனிசாமி