Lok Sabha Election 2024:  சத்திஸ்கரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, நக்சல்களை ஒழிக்க பிரதமர் மோடியை வெற்றி பெறச்செய்ய வேண்டு என வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


நக்சல்கள் ஒழிக்கப்படும் - அமித் ஷா:


சத்திஸ்கர் மாநிலம் கன்கெரில் பாஜக சார்பில் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய உள்துறை அமைச்சர், “நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை பிரதமர் மோடி ஒழித்துவிட்டார், நக்சல்கள் ஒழியும் தருவாயில் உள்ளனர்.  ஐந்தாண்டுகள் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ஆட்சியில் இருந்தார். ஐந்து ஆண்டுகளாக நக்சல்கள் மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நக்சல்களை ஒழிக்க வேண்டும் என்றால் பிரதமர் மோடியை வெற்றி பெறச் செய்யுங்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நக்சல்கள் முற்ற்லும் ஒழிக்கப்படுவார்கள்.


காங்கிரசை சாடிய அமித் ஷா:


அனைவருடைய சொத்துக்களும் கணக்கெடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது.எதற்காக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார். இன்று ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் இது குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி வருகிறது. அவர்களின் தேர்தல் அறிக்கை கணக்கெடுப்புகளைப் பற்றி பேசுகிறதா? இல்லையா? என்று நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன். வளங்கள் மீதான முதல் உரிமை சிறுபான்மையினருக்கே, பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்கு இல்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார்.


வாக்கு வங்கி அரசியல்:


காஷ்மீரில் இருந்து 370வது பிரிவை நீக்கினோம். வாக்கு வங்கியைப் பற்றித்தான் காங்கிரஸ் கவலைப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் ராம் லல்லாவின் பிரதிஷ்டைக்குக் கூட வரவில்லை. வாக்கு வங்கி அரசியல் மட்டுமே செய்கிறார்கள். 200 கோடி செலவில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக 10 பழங்குடியினர் அருங்காட்சியகங்களை பிரதமர் மோடி கட்டியுள்ளார். பழங்குடியினருக்கான பட்ஜெட்டை பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார்.  காங்கிரஸின் பூபேஷ் பாகேல் மற்றும் ராகுல் பாபா இருவரும் பழங்குடியினருக்காக 24 ஆயிரம் கோடி பட்ஜெட்டை வைத்திருந்தனர். இப்போது அதே பட்ஜெட்டை ரூ.1 லட்சத்து 24 கோடியாக உயர்த்தும் பணியை நரேந்திர மோடி செய்துள்ளார்.


காங்கிரஸ் என்ன செய்தது?


ஏழைகளுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும், அனைவரின் ரூ.5 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது மோடியின் உத்தரவாதம். சத்தீஸ்கருக்கு காங்கிரஸ் என்ன செய்தது? பூபேஷ் பாகேல் அரசு நக்சலைட்டுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் முதல்வராக விஷ்ணுதேவ் சாய் பொறுப்பேற்றவுடன் நக்சலைட்டுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை தொடங்கினார். காஷ்மீருக்காக உயிரை தியாகம் செய்ய சத்தீஸ்கர் மக்கள் தயாராக உள்ளனர்” என அமித் ஷா பேசினார்.