தமிழ்நாட்டின்  மையப்பகுதியாகவும், சென்னை, கோவை மாநகரங்களுக்கு இணையாக வளர்ந்த நகரம் திருச்சி. திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகள் திருச்சி மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளுடன் இணைத்து உருவாக்கப்பட்டு இருப்பது திருச்சி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி. இங்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15,44,742 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 7,52,953, பெண் வாக்காளர்கள் 7,91,548, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 241 பேர் இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்க தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர். இந்தத் தொகுதியில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் போட்டியிட்டு வென்ற அடையாளம் மட்டுமின்றி பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வென்ற தொகுதி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த அடைக்கலராஜ் நீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தொகுதி இது. அதேபோல், பா.ஜ.க-வைச் சேர்ந்த மறைந்த மத்திய அமைச்சரான ரங்கராஜன் குமாரமங்கலம் இரண்டு முறை இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தி.மு.க ஒரு முறையும், ம.தி.மு.க ஒருமுறையும் வென்றிருக்கின்றது. அ.தி.மு.க 2 முறை வென்றுள்ளது.


பெருமளவு நகர் புறப்பகுதிகளைக் கொண்ட இந்தத் தொகுதியில் பொன்மலை ரயில்வே பணிமனை, பாரத மிகுமின் நிறுவனம், துப்பாக்கித்தொழிற்சாலை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன. தொழிலாளர்கள் கணிசமாக உள்ள தொகுதி என்பதால் நீண்டகாலமாகவே இடதுசாரி கட்சிகள் இங்குப் போட்டியிட்டு வென்றுள்ளது.




திருச்சி தொகுதி பல தரப்பு மக்கள் உள்ளனர்.


திராவிடக் கட்சிகள் மட்டுமின்றி தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, சி.பி.எம் ஆகியவற்றுக்கும் சற்று வாக்கு வங்கி உள்ள தொகுதி இது. இதனால் பல தேர்தல்களில் இந்தத் தொகுதி கூட்டணியில் உள்ள தேசியக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்துள்ளது. 


அரசியல் கட்சிகளுக்கு திருச்சி திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கை காலந்தொட்டு கடைபிடிக்கப்படுவதால், திருச்சியில் இந்த நாடாளுமன்றத் தேர்தலின் முதல் பிரச்சாரத்தை தி.மு.க, அ.தி.மு.க-வினர் மேற்கொண்டனர். திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முத்தரையர், கள்ளர், வெள்ளாளர், முக்குலத்தோர், ஆதிதிராவிடர் சமூகத்தினரும், நாயுடு, செட்டியார், நாடார், யாதவர், ரெட்டியார், வன்னியர் உள்ளிட்ட சமூகத்தினரும் உள்ளனர். பெரும்பான்மையான இந்துக்கள் உள்ளதை போல கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கணிசமாக உள்ளனர். பல தரப்பட்ட மக்களை கொண்டது திருச்சி நாடாளுமன்ற தொகுதி என்பதால், திருச்சி தொகுதியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வட்டாரத்திற்குள் அடக்கிவிட முடியாது.




திருச்சியில் கடுமையான போட்டி


இந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த கருப்பையா, பா.ஜனதா கட்சி கூட்டணியில் அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், திருச்சி மாநகராட்சி 47-வது வார்டு முன்னாள் கவுன்சிலருமான ப.செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆகையால் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களும் அதிக செல்வாக்குகளை கொண்டவர்களாக இருப்பதால் வாக்குகள் அதிக அளவில் பிரிவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் போன்று இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் யாரும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய மதிமுக விற்கும் அதிமுக வேட்பாளருக்கும் கடுமையான போட்டி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த தேர்தல் மிகவும் பரபரப்பாகவும் கடுமையான போட்டி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.