வாஷிங் மெஷினில் அழுக்கு நீங்க துணி துவைக்க
வாஷிங் மெஷினில் நாம் துணி துவைத்தால் சில நேரம் அழுக்கு போகாதது போன்று இருக்கும். இதற்கு, ஒரு ஃபாயில் ஷீட்டை எடுத்து அதன் மேல் இரண்டு ஸ்பூன் கல் உப்பு சேர்க்கவும். உப்புடன், துணிக்கு பயன்படுத்தும் வாசனை திரவியத்தை ஒரு ஸ்பூன் சேர்க்கவும். இதை பொட்டலம் போன்று மடித்துக் கொள்ள வேண்டும். இந்த பொட்டலத்தில் சேஃப்டி பின் அல்லது சிறு குச்சி பயன்படுத்தி ஆங்காங்கே ஓட்டைகள் போட்டு விடவும். இதை வாஷிங் மெஷினில் துணி துவைக்கும் போது அதில் போட்டு விட வேண்டும். பின் வழக்கம் போல் மெஷினை ஆன் செய்து துணி துவைத்துக் கொள்ள வேண்டும். இப்போது துணிகளில் மொத்த அழுக்கும் நீங்ளி, பளிச்சென இருக்கும். கடைசியாக மெஷினில் இருந்து துணிகளை வெளியே எடுக்கும் போது அந்த ஃபாயில் ஷீட்டையும் எடுத்து விடலாம். இதில் வாசனை திரவியமும் சேர்த்து இருப்பதால் துணிகள் நல்ல வாசமாகவும் இருக்கும்.
செல்லோ டேப் நுணியை கண்டுபிடிக்க
நாம் செல்லோ டேப்பை கிஃப்ட் பேக் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்குப் பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்தியதுக்கு பின் அதை அப்படியே எடுத்து வைத்து விடுவோம். இந்த செல்லோ டேப்பை மீண்டும் பயன்படுத்தும் போது அதன் நுணியை கண்டு பிடிப்பது பெரும் சவாலாக இருக்கும். எனவே செல்லோ டேப்பை பயன்படுத்திய பிறகு அதன் நுணியில் ஒரு குச்சி அல்லது சேஃப்டி பின் வைத்து மடித்து விட்டால் நாம் அடுத்த முறை பயன்படுத்தும் போது நுனியை தேடி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
இட்லி மாவு புளிக்காமல் இருக்க
இட்லி, தேசை மாவை பெரும்பாலான இல்லத்தரசிகள் மொத்தமாக அரைத்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் இது இரண்டு நாட்களிலேயே அதிக புளிப்பாக மாறி விடும். ஆனாலும் அந்த மாவை தூக்கிப்போட மனமில்லாமல் அதை நாம் மீண்டும் பயன்படுத்துவோம். ஆனால் அதிகம் புளித்த மாவை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே மாவு விரைவில் புளிக்காமல் இருக்க, மாவின் மீது 4, 5 தேங்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் மாவு வைத்திருக்கும் பாத்திரத்தை மூடி ஃப்ரிட்ஜிக்குள் வைத்து விட வேண்டும். இப்படி வைத்தால் மாவு ஒரு வாரம் ஆனாலும் புளிக்காமல் இருக்கும். நாம் எந்த நிலையில் மாவை ஃப்ரிட்ஜில் வைக்கின்றோமோ, அப்படியே இருக்கும். மாவை ஒரு வாரத்தை கடந்து பதப்படுத்தி பயன்படுத்துவது நல்லதல்ல. எனவே தோசை மற்றும் இட்லி மாவை, 3 , 4 நாட்களில் பயன்படுத்தி விடுவது நல்லது.