ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் 217 இடங்கள் பிரச்சனைக்குரிய பகுதிகளாக கண்டரியப்பட்டுள்ளது என செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

 

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் நாடு முழுவதும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் இருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் புகைப்படங்களை அலுவலக ஊழியர்கள் அகற்றினர். அதேபோல் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வைக்கப்பட்ட படமும் அகற்றப்பட்டது.

 

இந்த நிலையில், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் 217 இடங்கள் பிரச்சணைக்குரிய பகுதிகளாக கண்டரியப்பட்டுள்ளது  என செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரன், தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.



 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளும், விருதுநகர் மாவட்டதில் உள்ள திருச்சுழி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி சட்ட மன்ற தொகுதி என 6 தொகுதிகள் உள்ளது.இதில் மொத்தம் 16,08,125 வாக்காளர்கள் உள்ளனர் இதற்காக 1934 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணமோ பொருளோ கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 217 இடங்கள் பிரச்சனைக்குரிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து 24 மணி நேரத்திற்குள் அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்படவும் மற்றும் அரசு இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் அனுமதியின்றி உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. 1950 மற்றும் 1800 425 7092 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பொதுமக்கள் தேர்தல் விதிமுறைகளை மீறுவோர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம். அதன் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

மேலும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதையொட்டி, 48 பறக்கும் படை குழு, 

24 நிலையான கண்காணிப்பு குழு என கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு, தேர்தல் விதிமுறைகள் மீறுவது கண்டறிந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் பொதுமக்கள் ரூபாய் 50 ஆயிரத்திற்கும்  மேல் கொண்டு செல்வதாக இருந்தால் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். காவல்துறை மற்றும் ஐந்து, துணை இராணுவம்  கம்பெனிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளார்கள்.மாவட்டத்தை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் முழுஒத்துழைப்பு கொடுத்து தேர்தல் சிறந்த முறையில் நடத்திட உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும்  மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரன்,  தெரிவித்தார்.