இந்திய துணைகண்டத்தின் அரசியல் மாற்றங்களுக்கு தமிழகம் எப்போதும் பெரும்பங்கு வகித்து வருகிறது. மத்தியில் ஆட்சி அமைக்க முனையும் கட்சிகள் தமிழகத்தின்  அரசியல் தலைவர்களை இப்போதும் சார்ந்துதான் இருக்கின்றன. மத்தியில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் பல கிங் மேக்கர்களை தமிழகம் கண்டிருக்கிறது. 


சுதந்திரத்திற்கு பிறகு 1977-ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை நடைப்பெற்ற 12 மக்களவை தேர்தல்களிலும் திமுக, அதிமுக என இரு திராவிட கட்சிகள் தலைமையிலான கூட்டணியே பெரும்பான்மை வாக்குகளை பகிர்ந்துகொண்டு வருகின்றன.


மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி என்ற பேரறிஞர் அண்ணாவின் முழக்கத்தை பின்பற்றி இந்த இரு திராவிட கட்சிகளும்  பெருவாரியான வாக்குகளை மாறி, மாறி கைப்பற்றி வருகின்றன. 1984-ஆம் ஆண்டு 96.91 சதவீதமாக இருந்த திராவிட கட்சிகளின் வாக்கு சதவீதம் 2014 ஆம் ஆண்டு வரை அளவு குறையவில்லை. 2014 ஆம் ஆண்டில் அதிமுக தனித்து போட்டியிட்ட நிலையில், இரு கூட்டணிகளின் ஒட்டுமொத்த வாக்கு சதவீதம் 71.07 சதவீதமாக இருந்தது. ஆனால், 1977 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எப்போதுமே திமுக தனித்து போட்டியிடவில்லை. கூட்டணி அமைத்தே அக்கட்சி போட்டியிட்டது.


ஜனதா கட்சி, ஜனதா தளம், இடது சாரி கட்சிகள் என்ற கூட்டணி கட்சிகளின் நிலை மாறி 1989 ஆம் ஆண்டுக்கு பிறகு புதிய கட்சிகள் தமிழகத்தின் அரசியலில் களம் கண்டன. பாமக, மதிமுக, பாஜக போன்ற கட்சிகள் முளைத்ததால் வாக்குகள் பிரிய ஆரம்பித்தன. இதனால், 1996 ஆம் ஆண்டு இரு திராவிட கட்சிகளின் கூட்டணி வாக்கு சதவீதம் 81 சதவீதமாக குறைந்தது. இதர கட்சிகள் 15 சதவீதம் வரை வாக்குகளை ஈர்த்தன. இதன் பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக போன்ற கட்சிகள் 2009 ஆம் ஆண்டு தேர்தலில் 10 சதவீதம் வரை வாக்குகளை ஈர்த்து திமுக, அதிமுக கூட்டணிகளின் வாக்கு சதவீதத்தை வெகுவாக குறைத்தன.


இதனால், சுதாரித்துக் கொண்ட திராவிட கட்சிகள் 2019 தேர்தலில் இதர வலிமையான கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்தன. ஆனால் அப்போதும் முந்தைய 90 சதவீதத்தை எட்டமுடியவில்லை. 84 சதவீதத்தை மட்டுமே இரு கட்சிகளின் கூட்டணிகளால் பெற முடிந்தது. தனித்து போட்டியிட்ட அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் மொத்தமாக 12.85 சதவீத வாக்குகளை கைப்பற்றின. தனித்து போட்டியிட்ட கட்சிகளும் தங்களால் வாக்குகளை தான் பிரிக்க முடியும், வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து கொண்டு திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஆரம்பித்தன.


கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், திமுக கூட்டணிக்கு  ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத் குமாரோ கட்சியையே பாஜகவில் இணைத்து விட்டு மனைவி ராதிகா சரத்குமாருக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக இம்முறை திமுகவை போல் வலுவான கூட்டணி அமைக்கமுடியாமல், தேமுதிக, எஸ்டிபிஐ போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது


பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிய பின்னர், தனி கூட்டணி அமைத்த பாஜக , பாமக, தமாகா, அமமுக, புதிய நீதி கட்சி போன்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.  ஆனால், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மட்டும் எப்போதும்போல் தனித்தே களம் காண்கிறது.  இதனால், 2024 மக்களவை தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.


ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் திமுக ஒதுக்கிய இடங்களை ஏற்றக் கொண்டு ஒரே அணியாக களம் காண்கின்றன. ஆனால், அதிமுகவுக்கோ பலமான கூட்டணி அமையவில்லை. பாஜகவோ சிறிய கட்சிகளை இணைத்துக் கொண்டு தனது  தலைமையில் முதல்முறையாக களம் காண்கிறது.  இந்த மும்முனை கூட்டணி போட்டியில் திமுகவின் கையே ஓங்கியுள்ளதால், திமுக தலைமையிலான கூட்டணிக்கே வெற்றி நிச்சயம் என்று அத்தனை கருத்து கணிப்புகளும் கூறுகின்றன. 


தனியாகத்தான் போட்டியிடுவோம் என்று அடம்பிடித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியால் வாக்குகளை தான் பிரிக்க முடியுமே தவிர வெற்றி பெற முடியாது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எதிர் காலத்தில் கூட்டணி அமைப்பது குறித்து சீமான் சிந்தித்தால் மட்டுமே அக்கட்சியும் பிழைக்கும், தொண்டர்களும் சோர்வாகாமல் நிலைத்து நிற்பார்கள் என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.  


கூட்டணி கட்சிகளும் திராவிட கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால் மட்டுமே வெற்றியை காண முடியும் என்பதில் தீர்க்கமாக இருந்து கொள்கை ஒத்து போகும் திராவிட கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளன. 2024 மக்களவை தேர்தலிலும் கூட்டணியின் பலமே எதிரொலிக்கும் என்பதால் திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதனால், நாற்பதும் நமதே - நாடும் நமதே என்ற முழக்கத்துடன் திமுக தனது மக்கள் நல திட்டங்களை எடுத்துரைத்து  உற்சாகத்துடன் களம் காண்கிறது.

{இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் கருத்துகளே. இதற்கு ஏபிபி நாடு பொறுப்பேற்காது. }