மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இன்று முதல் வேட்பாளர் நேர்காணலில் ஈடுபடுகின்றன. 


மக்களவை தேர்தல் 


2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடே உற்றுநோக்கும் இந்த தேர்தலில் மத்தியில் பாஜக தலைமையிலாக தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் பாஜக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சிக்கு வருவதில் முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம் இந்த முறை காங்கிரஸ் கட்சியை பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என வியூகம் அமைத்து வருகிறது. 


தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?


இதனிடையே தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலை பொறுத்தவரை கூட்டணி அமைப்பதே சற்று இழுபறியாகவே போய்க் கொண்டிருக்கிறது. வழக்கமாக திமுக - அதிமுக தவிர்த்து நாம் தமிழர் கட்சி ஆகியவை தான் நேருக்கு நேர் மோதும். ஆனால் இம்முறை  நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என அறிவித்து விட்டது. திமுக கூட்டணியில் அக்கட்சி நேரடியாக 21 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 10, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்கள், மதிமுக, கொ.ம.தே.க மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தலா ஒரு இடங்கள் என 40 தொகுதிகளையும் பிரித்து கூட்டணியை உறுதி செய்துள்ளது. 


அதேசமயம் அதிமுகவில் இன்னும் பெரிய கட்சிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை. 3 கட்சிகள் இதுவரை ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் எதிர் தரப்பு கூட்டணி உருவாவதில் இழுபறி நீடிக்கிரது. 


விருப்பமனு நேர்காணல்


இந்நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் ஏற்கனவே மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விண்ணப்பங்களை விநியோகம் செய்தது. இதனை ஏராளமானோர் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். கிட்டதட்ட 10 நாட்களாக இந்த விண்ணப்பம் வழங்கும் மற்றும் பெறும் பணி நடந்து வந்த நிலையில் இன்று முதல் விருப்ப மனு அளித்தவர்களிடன் நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக விருப்பமனு அளித்தவர்களை சந்தித்து தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராயந்து அறிந்திட இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது. 


இதேபோல் இன்று மற்றும் நாளை (மார்ச் 11) ஆகிய இரண்டு நாட்கல் இரண்டு வேளைகளாக விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.