வேட்பாளருக்கு பூரண கும்ப மரியாதை:


நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். நேற்று திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி நகரில் வடக்கு பகுதியில் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் துணை மேயர் ராஜப்பா ஆகியோர் 1வது வார்டு கருணாநிதி நகர், செல்லாண்டியம்மன் கோவில் தெரு, தாலுகா ஆபிஸ் ரோடு, காந்தி மார்க்கெட், அரசமர வீதி, தாடிக்கொம்பு ரோடு, ஈவேரா சாலை, அசோக் நகர், RM காலனி, ராமநாதபுரம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கரகாட்டத்துடன் வாக்கு சேகரித்து வந்த வேட்பாளரை 8வது வார்டு பகுதி பெண்கள் பூரண கும்பத்துடன் மரியாதை செய்து வரவேற்றனர் .




தீவிர பரப்புரையில் திமுக வேட்பாளர் :


பின்னர் வாக்காளர்கள் மத்தியில் பேசிய சச்சிதானந்தம், “நான் திண்டுக்கல்லை சொந்த ஊராகக் கொண்டவன். எனவே திண்டுக்கல் மக்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறது என நேரடியாக பார்த்து உணர்ந்தவன். பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம், சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை இந்த கூட்டணிக் கட்சி செய்யும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏழ்மையான மக்களுக்கான கூட்டணியை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினரை உருவாக்குவோம்” என்று பேசி வாக்குகளை சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் பிலால் உசேன், ஆனந்த், ஜான் பீட்டர், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




தேர்தலை புறக்கணிக்கும் மலை கிராம மக்கள் சொல்லும் காரணம்:


வேடசந்தூர் அருகே தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்த மலை கிராம மக்களால் பரபரப்பு. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, அய்யலூர் பேரூராட்சி 14 வார்டுக்கு உட்பட்ட மலை கிராமமான இச்சித்துப்பட்டியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இச்சித்துப்பட்டி கிராமத்திற்குச் செல்ல பஞ்சந்தாங்கி சாலையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் கரடு முரடான மண் சாலையில் செல்ல வேண்டும். மேலும் கிராமத்தில் முறையான குடிநீர் வசதி இல்லாததால், ஆற்று ஓடையில் வரும்  ஊற்றுநீரை பிடித்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஊர் மக்கள் பெரிதும் சிரமமடைந்து வந்தனர். இது குறித்து ஊர் மக்கள் அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும், எவ்வித அடிப்படை வசதிகளும் செய்துதரவில்லை என்று கூறப்படுகிறது.




புகார் அளித்தும் பலனில்லை மக்கள் விரக்தி:


இதனால் விரக்தியடைந்த ஊர் மக்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக ஊரின் நுழைவுவாயில் பகுதியில் பேனர் வைத்து கருப்பு கொடி கட்டியுள்ளனர்.அதில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு சாலை வசதியும் குடிநீர் வசதியும் இல்லை. அதனால் நாங்கள் வரும் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலை புறக்கணிப்போம் என்று மலைக்கிராம மக்கள் பேனர் வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.