தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. 


மக்களவை தேர்தல் திருவிழா


கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரும் எதிர்பார்ப்புகளுடன் மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கு ஜூன் 1 ஆம் தேதி வரை கிட்டதட்ட 43 நாட்கள் இடைவெளியில் வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அமலுக்கு வந்த விதிமுறைகள் 


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் உடனடியான விதிமுறைகள் அமலுக்கு வந்தன. மக்களுக்கு பணம் உள்ளிட்ட பொருட்கள் இலவமாக வழங்கி வாக்குகளை பெறுவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இரவு, பகலாக காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆவணங்கள் இல்லாத பணம், பொருட்கள் ஆகியவை ஆங்காங்கே பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 


தமிழ்நாடு - புதுச்சேரி கள நிலவரம் 


மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 40 தொகுதிகள் உள்ளது. இதில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டியானது நிலவுகிறது. இதில் திமுக 21 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் (10), சிபிஐ (2), சிபிஎம் (2), விசிக (2), மதிமுகன்(1), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (1), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (1) என தொகுதி பங்கீட்டை முடித்து விட்டது. 


அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இன்று அல்லது நாளை தொகுதி பங்கீட்டை முடிப்பார்கள் என கூறப்படுகிறது. ஓரிரு தினங்களில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட உள்ளார்கள். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 


வேட்புமனு தாக்கல் 


இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் இன்று முதல் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மார்ச் 27 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது 28 ஆம் தேதி பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாளாகும். 


இதனையடுத்து வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வசதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் தேவையான முன்னேற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே வேட்புமனுக்கள் பெறப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.